

வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அதேவேளை, அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். மேலும், ஈரானுக்கு டிரம்ப் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். அந்த கெடு முடிவடைய இன்னும் 48 மணி நேரம் (திங்கட்கிழமை வரை) உள்ளது.
இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறுகையில், ஹர்மூஸ் ஜலசந்தியை திறக்கவேண்டும் அல்லது எங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று ஈரானுக்கு நான் 10 நாட்கள் கெடு விதித்திருந்தேன். ஈரானுக்கான நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஹர்மூஸ் ஜலசந்தியை இன்னும் 48 மணிநேரத்திற்குள் ஈரான் திறக்காவிட்டால் ஈரானில் நரகம் (கடுமையான தாக்குதல்) திறக்கப்படும்’ என்றார்.