

பியூனஸ் அய்ரெஸ்,
அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அய்ரெஸ் நகரில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அர்ஜெண்டினாவில் முகாமிட்டுள்ளனர். மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜிங்பிங், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டுக்கு இடையே நடைபெறுவதாக இருந்த புதின் - டிரம்ப் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த டிரம்ப், புதினுடனான சந்திப்பை ரத்து செய்ததாக கூறப்பட்டது. மாநாட்டின் துவக்கத்தின் போது, மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தலைவர்கள் ஒன்றாக நின்று குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
குழு புகைப்படம் எடுக்க கடைசியாக வந்த சில தலைவர்களில் டிரம்பும் ஒருவர் ஆவார். டிரம்ப் சென்ற போது அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த ரஷ்ய அதிபர் புதினை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார். அதேபோல், சவூதி இளவரசர் சல்மானையும், டிரம்ப் கண்டு கொள்ளவில்லை. ஆனால், அதன் பிறகு, மாநாட்டுக்கு இடையே, சவூதி இளவரசர் சல்மானை டிரம்ப் நட்பு ரீதியாக சந்தித்ததாக சவூதி ஊடகங்களில் செய்தி வெளியானது.