அமெரிக்க போர்க்கப்பல்களை அச்சுறுத்தினால் ஈரான் ராணுவ படகுகளை சுட்டு அழிக்க டிரம்ப் உத்தரவு

அமெரிக்க போர்க்கப்பல்களை அச்சுறுத்தினால் ஈரான் ராணுவ படகுகளை சுட்டு அழிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க போர்க்கப்பல்களை அச்சுறுத்தினால் ஈரான் ராணுவ படகுகளை சுட்டு அழிக்க டிரம்ப் உத்தரவு
Published on

வாஷிங்டன்,

ஈரானுடன் வல்லரசு நாடுகள் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்கா வெளியேறியது. இது இருநாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு வழிவகுத்தது.

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட விதிகளை புறக்கணிப்பதாக ஈரான் அறிவித்தது.

இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரானை அச்சுறுத்தும் விதமாக மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு போர்க்கப்பல்களை அனுப்பியது. இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத் தில் பதற்றமான சூழல் நீடிக் கிறது.

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவானது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈரான் விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அப்படி நடந்தால் ஈரான் பேரழிவை சந்திக்கும் எனவும் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

இந்த சூழலில் கடந்த 15-ந்தேதி பாரசீக வளைகுடா கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலை ஈரான் ராணுவத்தினர் படகுகளில் சுற்றிவளைத்தனர்.

ஈரான் நாட்டுக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய 11 சிறிய படகுகள் அமெரிக்க போர்க்கப்பலை அச்சுறுத்தும் விதமாக சுற்றிவளைத்து வட்டமிட்டது. இது தொடர்பான வீடியோ பதிவை அமெரிக்க ராணுவம் வெளியிட்டு ஈரானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் ஈரான் ராணுவ படகுகள் அனைத்தையும் சுட்டு அழிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பாரசீக வளைகுடா கடலில் எங்கள் கப்பல்களுக்கு தொந்தரவு தந்தால் எந்தவொரு படகையும், அது ஈரான் ராணுவ படகு ஆயினும் அனைத்தையும் சுட்டு அழித்துவிட கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜனாதிபதி டிரம்ப், ஈரானியர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதன் மூலம் எங்கள் கப்பல்கள் மற்றும் வீரர்களின் பாதுகாப்புக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com