ஜெருசலேம் விவகாரம் டொனால்டு டிரம்ப் முடிவுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்

ஜெருசலேம் விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் முடிவுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.
ஜெருசலேம் விவகாரம் டொனால்டு டிரம்ப் முடிவுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
Published on

கெய்ரோ,

அமெரிக்காவின் அறிவிப்பு பிராந்தியத்தில் மேலும் குழப்பத்தையும், வன்செயல்களையும் அதிகரிக்கும் என அரபு நாடுகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மிகவும் நெருங்கிய நட்பு கொண்டாடிய நாடுகள் உள்பட மொத்தம் 22 நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. டொனால்டு டிரம்ப்பின் அறிவிப்பிற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அது குறித்த அறிவிப்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் வெளியிட்டார். மேலும் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மாற்றவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். சர்வதேச அளவில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கிற முதல் உலக நாடாக அமெரிக்கா திகழ்கிறது.

இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிடுவதற்கு முன்பே அனைத்து அரபு நாடுகளும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் ஓரணியில் திரண்டன. அமெரிக்காவின் ஆதரவு நாடான சவுதி அரேபியா, இது முஸ்லிம்களுக்கு ஆத்திரம் ஏற்படுத்தும் செயலாக அமையும் என்றது. டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய உருவப்படம், அமெரிக்க தேசியக்கொடியை எரித்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்தோனேஷியா உள்பட பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் டிரம்ப் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

டிரம்பின் அறிவிப்பால் பெருத்த சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடியது, அங்கும் அமெரிக்காவின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கு இடையேயான பதற்றம் தணிந்து காணப்பட்ட நிலையில் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு அங்கு வன்முறையை தூண்டும் விதமாக அமைந்து உள்ளது, அங்கு பதற்றம் அதிகரித்து உள்ளது. அங்கு நேரிட்ட மோதலில் இருவர் உயிரிழந்து உள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். பெய்ரூட்டில் அமெரிக்க தூதரகம் முன்னதாக பெரும் வன்முறை வெடித்து உள்ளது.

இந்நிலையில் ஜெருசலேம் விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் முடிவுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவில் 22 அரபு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கலந்துக் கொண்ட கூட்டம் நடந்தது. அதில் டொனால்டு டிரம்ப் அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு சர்வதேச சட்டத்தை மீறிய ஆபத்தான செயல். பதற்றத்தை மேலும் அதிகரிக்கும். பிராந்தியத்தில் மேலும் குழப்பத்தையும், வன்செயல்களையும் அதிகரிக்கும்.

அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும் என உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தீர்மானத்தில் இடம்பெற்று உள்ளது.

ஜெருசலேம் விவகாரத்தில் அரபு நாடுகளின் அவசர உச்சி மாநாடு ஒன்றை ஜோர்டானில் நடத்த வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com