

வாஷிங்டன்,
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக உடன்பாடு ஏற்படாததால் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ம் தேதி போர் தொடுத்தன.இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே போரை நிறுத்த 15 அம்ச திட்டத்தை அமெரிக்கா அறிவித்தது.
இதை மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான், எகிப்து,துருக்கி ஆகிய நாடுகள் மூலம் ஈரானுக்கு தெரிவித்தது. மேலும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா மத்தியஸ்தர்கள் மூலம் தகவல் அனுப்புவதாக ஈரான் தெரிவித்தது. ஆனால் அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தை ஈரான் நிராகரித்தது.
போரை முடிவுக்கு கொண்டு வர 5 நிபந்தனைகளை வெளியிட்டது. எதிரியின் தாக்குதல்கள் மற்றும் கொலைகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். மீண்டும் போர் தொடங்காமல் இருக்க உறுதியான செயல்முறைகள் உருவாக்கப்பட வேண்டும். போர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆயுத குழுக்களுக்கு எதிராக நடக்கும் போர் உள்பட அனைத்து தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்படுத்தும் ஈரானின் அதிகாரட்தை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று நிபந்தனைக்ளை விதித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஈரான் மத்திய கிழக்கை கைப்பற்ற முயன்றது. மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் கையில் அணு ஆயுதம் இருக்கக் கூடாது. போர் நடந்து கொண்டிருந்தபோது நேட்டோ உதவததால் நான் மிகுந்த அதிருப்தியில் உள்ளேன். ஈரான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. ஈரானுடனான போர் தற்போது முடிந்து விட்டது என அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் பேசினார்.
இதனிடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக பாகிஸ்தானுக்குத் தெரிவிக்கப்பட்ட அமெரிக்காவின் முன்மொழிவுக்கு, அது "ஒருதலைப்பட்சமானது மற்றும் நியாயமற்றது என ஈரானிய ஒரு மூத்த அதிகாரி கூறியுள்ளார்.