ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க காலக்கெடு விதித்த டிரம்ப் - நிராகரித்த ஈரான்

அமெரிக்காவின் எச்சரிக்கையை முட்டாள்தனமானது எனக்கூறி ஈரான் நிராகரித்தது.
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க காலக்கெடு விதித்த டிரம்ப் - நிராகரித்த ஈரான்
Published on

தெஹ்ரான்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அதேவேளை, அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல்வேறு நாடுகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்தார். இதை செய்ய தவறினால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களை அழிக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இந்த இறுதி எச்சரிக்கையை ஈரான், ஏளனம் செய்ததுடன் முட்டாள்தனமானது எனக்கூறி நிராகரித்தது. டிரம்ப்பின் இறுதி எச்சரிக்கைக்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், போர்நிறுத்த முன்மொழிவை நிராகரிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த பதிலை முக்கிய மத்தியஸ்தரான பாகிஸ்தான் மூலம் ஈரான் தெரிவித்துள்ளதாக ஈரானின் அரசு செய்தி நிறுவனம் கூறி உள்ளது.

இது குறித்து எகிப்தில் உள்ள ஈரான் தூதரகத்தின் தலைவர் மொஜ்தபா பெர்டோசிபூர் கூறுகையில், "நாங்கள் வெறுமனே ஒரு போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். மீண்டும் நாங்கள் தாக்கப்பட மாட்டோம் என்ற உத்தரவாதங்களுடன் மட்டுமே போர் முடிவுக்கு வருவதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com