நிறைவேற்று அதிகாரத்தில் டிரம்ப் கையெழுத்து: அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் - எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள் முடிவு

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனத்துக்கான நிறைவேற்று அதிகாரத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதனை எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள் முடிவு செய்துள்ளன.
நிறைவேற்று அதிகாரத்தில் டிரம்ப் கையெழுத்து: அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் - எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள் முடிவு
Published on

வாஷிங்டன்,

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது.

ஆனாலும் மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இதற்கான நிதியை பெறுவதற்காக தற்போது நாட்டில் அவசர நிலையை பிறப்பித்து உள்ளார். இதற்கான நிறைவேற்று அதிகாரத்தில் கையெழுத்து இட்ட அவர், இது தொடர்பாக செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.

அதில் அவர், தேசிய அவசரநிலை சட்டம் பிரிவு 201-ன்படி நாட்டில் அவசர நிலையை பிறப்பிப்பதில் எனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளேன். எல்லை பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.

நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சட்ட நடவடிக்கை மூலம் அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள அவர்கள், இதற்காக வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com