

வாஷிங்டன்,
அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு 'டிரம்ப் பெருங்கடல்' அல்லது 'அமெரிக்காவின் பெருங்கடல்' எனப் பெயர் மாற்றலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், உலகின் முக்கிய நீர்நிலைகளுக்கு தனது பெயரையோ அல்லது அமெரிக்காவின் பெயரையோ சூட்டும் யோசனையை மீண்டும் முன்வைத்துள்ளார். ஏற்கனவே பல்வேறு நீர்நிலைகளின் பெயர்களை மாற்றுவது குறித்து பேசி வந்த அவர், தற்போது அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு தனது பெயரை வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டென்னசி மாகாணத்தின் கிளார்க்ஸ்வில்லில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அதிபர் டிரம்ப் பேசியதாவது:
நாம் ஏற்கனவே மெக்சிகோ வளைகுடாவை 'அமெரிக்க வளைகுடா' என்றும், ஒண்டாரியோ ஏரியை 'அமெரிக்க ஏரி' என்றும் மாற்றியுள்ளோம். இப்போது நமக்கு ஒரு நதியும், ஒரு பெருங்கடலும் தேவைப்படுகிறது. எனது பதவிக்காலம் முடிவதற்குள் ஒரு பெருங்கடலின் பெயரை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன்.
அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு 'டிரம்ப் பெருங்கடல்' அல்லது 'அமெரிக்காவின் பெருங்கடல்' எனப் பெயர் மாற்றலாம். இவ்வாறு டிரம்ப் பேசினார். டிரம்பின் இந்த யோசனை கூட்டத்தில் இருந்தவர்களிடையே பெரும் சிரிப்பையும் கைதட்டலையும் ஏற்படுத்திய அதே வேளையில், சமூக ஊடகங்களில் இது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நீர்நிலைகள் மற்றும் புவியியல் பகுதிகளின் பெயர்களை மாற்றுவது குறித்து டிரம்ப் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
கடந்த ஆண்டு, மெக்சிகோ வளைகுடாவை ‘அமெரிக்கா வளைகுடா’ (Gulf of America) என மறுபெயரிடும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டார். இந்த முடிவு அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவுடன் தூதரக ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்தியது.
மேலும், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை ‘டிரம்ப் ஜலசந்தி’ (Trump Strait) என மாற்றலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் சூழலில், செப்டம்பர் மாதம் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக டிரம்ப் கேள்வி எழுப்பியிருந்தார்.
மெக்சிகோ வளைகுடா, ஒன்டாரியோ ஏரி, நியூ மெக்சிகோ மாகாணம், ஹார்முஸ் ஜலசந்தி எனப் பல்வேறு பகுதிகளின் பெயர்கள் குறித்து டிரம்ப் தொடர்ந்து புதிய யோசனைகளை முன்வைத்து வருகிறார்.
தற்போது அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு தனது பெயரைச் சூட்டலாம் என்று அவர் கூறியிருப்பது, சர்வதேச அலவில் கவனம் பெற்றுள்ளது.