அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வாகியுள்ளார். அவருடன் போட்டியிட்டு தோல்வியடைந்த டொனால்டு டிரம்ப், தேர்தலில் விதிமீறல்கள் நடந்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.

அதிபர் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களாக கருதப்படும் பென்சில்வேனியா, மிச்சிகன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாக டிரம்ப் கூறினார். இது குறித்து வழக்கு தொடரபோவதாக அவர் கூறிய போதும், தேர்தலில் விதிமீறல்கள் எதுவும் நடைபெறவில்லை என அந்த மாகாண அரசுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

ஒருபுறம் ஜோ பைடனின் வெற்றியை ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் நிலையில், மறுபுறம் டிரம்ப் ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். தேர்தலில் வெளிப்படைத் தன்மை இல்லை என டிரம்ப் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் முடிவுகள் உறுதியான பிறகும், இது போன்ற போராட்டங்களும், பேரணிகளும் அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் நேற்று(சனிக்கிழமை) அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் முன்பு ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முடிவு குறித்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும், டிரம்பிற்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையிலும், மீண்டும் டிரம்ப் ஆட்சி வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர், வாக்குகளை திருடுவதை நிறுத்துங்கள், இன்னும் நான்கு ஆண்டுகள், நாங்கள் டிரம்பை விரும்புகிறோம் என்பன போன்ற பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்த நிகழ்வுக்கு முன்னதாக, தனது காரில் அந்த பகுதி வழியாக சென்ற அதிபர் டிரம்ப், தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தவாறு சென்றார்.

இதற்கிடையில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியதால் அங்கு சமூக இடைவெளி கேள்விக்குறியானது. அமெரிக்காவில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முக கவசம் உள்ளிட்ட எந்த பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com