

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் அடுத்த வாரம் சீனாவில் நடைபெற உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய 3 நாடுகளின் தலைவர்கள் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும். இந்தச் சந்திப்பு சர்வதேச அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக நவம்பர் 19-ந்தேதி டிரம்ப், புதின், ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பில் அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது மற்றும் உலக நாடுகளின் அணு ஆயுதங்களைக் குறைப்பது ஆகியவை முக்கிய விவாதப் பொருட்களாக இருக்கும்.
உலகில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க டிரம்ப் விரும்புவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா மற்றும் ரஷியா இடையிலான கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான நியூ ஸ்டார்ட் கடந்த பிப்ரவரி மாதத்துடன் காலாவதியானது. இதையடுத்து, இரு நாடுகளின் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், சீனாவையும் உள்ளடக்கிய புதிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்கா விரும்புகிறது.ஆனால், சீனா தனது அணு ஆயுத இருப்பை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், புதிய ஒப்பந்தத்தில் இணைய ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பில் ஈரான் விவகாரம் குறித்தும் 3 நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். குறிப்பாக, ஈரான் தொடர்பான போர் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ரஷியா-உக்ரைன் போர் குறித்து இந்த முத்தரப்பு சந்திப்பில் விவாதிக்க டிரம்ப் திட்டமிடவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிரம்பின் சீனப் பயணத்தில் தொழிலதிபர் எலான் மஸ்க்கும் பங்கேற்க உள்ளார். சீனாவில் அவருக்கு உள்ள தொழில் சார்ந்த நலன்கள் காரணமாக இந்தப் பயணத்தில் அவர் இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 3 நாட்டு தலைவர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அவர் பங்கேற்க மாட்டார். உலகின் முக்கிய அணு ஆயுத வல்லரசுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒரே மேடையில் சந்திப்பது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது