

வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் நாட்டின் கஜானாவில் நிதியை நிரப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சீனா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரிவிதிப்புகளை அமல்படுத்தினார்.
இதற்கு சீனா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், உலகின் மிக பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் 2-ம் இடத்தில் இருக்கும் சீனாவுக்கு வருகிற ஏப்ரல் மாதம் டிரம்ப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார் என தகவல் வெளியானது.
எனினும், அதற்கான தேதி உள்ளிட்ட அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், டிரம்ப் மார்ச் 31-ந்தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தி உள்ளது. ஏப்ரல் 2-ந்தேதி வரை அவர் சீனாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இந்த பயணத்தின்போது, சீன அதிபர் ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேச இருக்கிறார். அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீனா, இறுதியாக இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட உலக நாடுளின் பிரதமர்களை வரவேற்று விருந்தளித்து உபசரித்தது. அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான இவற்றின் பிரதமர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் சீனாவுக்கு செல்லாமல் இருந்தனர்.
கிரீன்லாந்து விவகாரம், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடுமையான வரி விதிப்புகள் என டிரம்பின் நடவடிக்கைகளால் மற்ற நாடுகள் இந்த முடிவை எடுத்தன. சீன தயாரிப்பு மின்சார வாகனங்களுக்கான கடுமையான வரிகளை கனடா குறைத்தது. பதிலுக்கு கனடா வேளாண் பொருட்களுக்கான தடைகளை விலக்கி சீனா எளிமைப்படுத்தியது.
கடந்த மாதம், சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொண்டன. இதனால், சீன மின்சார வாகனங்களுக்கான வரி விதிப்புகளுக்கு பதிலாக குறைந்த விலையில் விற்பது என முடிவானது.
இந்த சூழலில், சீனாவுக்கு செல்லும் முடிவை டிரம்ப் எடுத்துள்ளார். டிரம்ப் 2-வது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சீனாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இதேபோன்று, ஜின்பிங் இந்த வருட இறுதியில் அமெரிக்காவுக்கு செல்வார் என தகவல் தெரிவிக்கின்றது.