

வாஷிங்டன்,
அமெரிக்காவின் அதிபராக 2017 முதல் 2021 ஆம் ஆண்டு (ஜனவரி) வரை இருந்தவர் டொனால்ட் டிரம்ப். இவர் அதிபராக இருந்த போது அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளராக இருந்தவர் மார்க் எஸ்பர். இவர் தற்போது எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மெக்சிகோவில் உள்ள சட்டவிரோத போதைப்பொருள் மருந்து ஆய்வகங்களில் வெடிகுண்டு வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து டொனால்ட் டிரம்ப் தன்னிடம் இரண்டு முறை ஆலோசித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் " 2020 ஆம் ஆண்டில் மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் மருந்து ஆய்வகங்களை அழிக்க இராணுவம் ஏவுகணைகளை ஏவ முடியுமா" என்று டிரம்ப் இரண்டு முறை தன்னிடம் கேட்டதாக கூறியுள்ளார்.
வெடிகுண்டுகளை வீசிவிட்டு பின்னர் அதற்கு நாம் பொறுப்பல்ல என்று கூறிவிடலாம் என டிரம்ப் கூறியதாகவும் மார்க் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் கேட்ட அந்த சமயத்தில் தான் எதுவும் பேசாமல் வாயடைத்து நின்றதாக அவர் தெரிவித்துள்ளார். மார்க் எஸ்பர் தெரிவித்துள்ள இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் அதிபராக இருந்த சமயத்தில் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இராணுவத்தை அனுப்ப முடியாது என மார்க் எஸ்பர் டிரம்பை பகிரங்கமாக எதிர்த்தார். அப்போதில் இருந்து இருவருக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.