ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்று அறிவிக்காவிட்டால்... ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் சுவிட்சர்லாந்தில் அணுசக்தி தொடர்பான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்று அறிவிக்காவிட்டால்... ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்கா-ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதி ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளின் குழுக்கள் முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தின. அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறலாம் என்ற சூழலில் மீண்டும் மோதல் வெடித்தது. ஹோர்முஸ் ஜலசந்தியில் தாங்கள் விதித்த கட்டுப்பாட்டை மீறியதாக வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் மீது அமெரிக்கா சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை, டிரோன்களை வீசியது.நேற்று அமெரிக்கா எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் புதிய சதித்திட்டத்தை தீட்டியதாக இஸ்ரேல் உளவுத்தகவல் ஒன்றை அமெரிக்காவுக்கு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஈரானுக்கு அமெரிக்கா கெடு ஒன்றை விதித்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியை போக்குவரத்துக்கு திறந்துவிட்டதாகவும், இனி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்றும் ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா 24 மணி நேர கெடுவை விதித்துள்ளது. இதைச் செய்யத் தவறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வி அடைந்தால் அதற்கான மாற்றுத் திட்டங்களும் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த கெடு தகவல் மத்தியஸ்தர்கள் மூலம் ஈரானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் எச்சரிக்கை

இதற்கிடையே டிரம்ப் ஈரானுக்கு அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் கூறும்போது, என்னை படுகொலை செய்யவோ அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபடவோ ஈரான் அரசு முயன்றால், அந்நாட்டை தாக்க 1,000 ஏவுகணைகள் தயார்நிலையில் உள்ளன. அதைத் தொடர்ந்து உடனடியாக மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்படும். படுகொலை அல்லது படுகொலை முயற்சி நடந்தால் ஈரானுக்கு எதிராக பதிலடி கொடுக்குமாறு ராணுவத்திற்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். ஈரானின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகச் சிதைத்து அழிக்க அமெரிக்க ராணுவம் தயாராகவும், விருப்பத்துடனும், திறனுடனும் உள்ளது.

நிரந்தர முற்றுப்புள்ளி

ஈரான் எங்களிடம் பேச்சுவார்த்தைகளை தொடருமாறு கேட்டுள்ளது. நாங்களும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளோம். ஆனால், போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அவர்களுக்கு தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்துவிட்டோம். அதேவேளையில் போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

பதிலடி கொடுக்கப்படும்

இதற்கிடையே அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் சுவிட்சர்லாந்தில் அணுசக்தி தொடர்பான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் பேச்சுவார்த்தையை தொடருமாறு ஈரான் கேட்டதாக டிரம்ப் கூறியதை ஈரான் வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.இதுதொடர்பாக அந்த அமைச்சகம் கூறியதாவது:-நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரவில்லை. ஆனால் கத்தார் நாட்டு மத்தியஸ்தர்கள் மூலம் ஈரான் வருவதற்கு ஒப்புக்கொண்டோம். அமெரிக்கா தனது உறுதிமொழிகளை மீறினால் அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றார்.மேலும் ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறும்போது, போரை முடிவுக்குக் கொண்டுவருவது உலக நாடுகளின் முன்னுரிமையாக உள்ளது. ஆனால் இந்த மோதலில் ஒருபோதும் ஈரான் சரண் அடையாது.அமெரிக்கர்கள் எப்போதெல்லாம் ஒப்பந்தத்தை மீறுகிறார்களோ, அப்போதெல்லாம் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம். அவர்களுக்கு எதிராக உறுதியாக நின்று ஈரானிய மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவோம் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com