நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்க கைதிகளை விடுவித்தது வடகொரியா, டிரம்ப் வரவேற்பு

நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்க கைதிகளை வடகொரியா விடுவித்துள்ளது. வடகொரியாவின் செயலை டிரம்ப் பாராட்டியுள்ளார். #DonaldTrump # NorthKorea
நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்க கைதிகளை விடுவித்தது வடகொரியா, டிரம்ப் வரவேற்பு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்கா, வடகொரியா இடையே பல ஆண்டுகளாக பகை நீடித்து வந்தது. இதனால் வடகொரியா, தென்கொரியா இடையேயான மோதல் போக்கை, அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்தி வந்தது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க போர்க்கப்பலை நிறுத்துவது, தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சி ஆகியவற்றை அமெரிக்கா மேற்கொண்டது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் இடையே கடும் வார்த்தை போர் நீடித்தது.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க விரும்புவதாக, அங்கு சென்ற தென்கொரிய தூதரக குழுவிடம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். அதனை டிரம்பும் ஏற்பதாக செய்திகள் வெளியாகின. இந்த சூழலில் கடந்த ஏப்ரல் 27ல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்து பேசினார்.

இதனால் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் டிரம்ப், கிம் ஜாங் உன் சந்திப்பிற்கான இடம் தேர்வு நடைபெற்று வந்தது.கடந்த 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தேதி மற்றும் இடம் முடிவு செய்யப்பட்டு விட்டதாக குறிப்பிட்டார். இந்நிலையில் தென்கொரிய நாளிதழ்களில் வரும் ஜூன் 9ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டில், டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தலைவர்கள் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில், நல்லெண்ண அடிப்படையில் 3 அமெரிக்க கைதிகளை வடகொரியா விடுவித்துள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், விடுவிக்கப்பட்ட அமெரிக்கர்களை டிரம்ப் நேரில், சென்று வரவேற்றார். "அமெரிக்கர்களை விடுதலை செய்த கிம்முக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் டிரம்ப் கூறினார். விடுவிக்கப்பட்ட மூன்று கைதிகளில் ஒருவர் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். மற்ற இருவரும் ஓராண்டுக்கும் மேல் சிறையில் இருப்பவர்கள். அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது அரசியல் என்றும், மனித உரிமை மீறல் என்றும் பரவலாக கண்டனங்கள் எழுந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com