தொலைபேசியில் அழைத்து பேசினார் பிரதமர் மோடியுடன் டிரம்ப் அவசர ஆலோசனை

கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியாவும், அமெரிக்காவும் கொரோனா வைரசுக்கு எதிராக முழு பலத்தையும் பயன்படுத்த ஒப்புக்கொண்டன.
தொலைபேசியில் அழைத்து பேசினார் பிரதமர் மோடியுடன் டிரம்ப் அவசர ஆலோசனை
Published on

வாஷிங்டன்,

பிரதமர் மோடி மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிகுந்த அன்பு வைத்துள்ளார். டிரம்ப் மீது பிரதமர் மோடியும் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார். இரு தலைவர்களும் உலக விவகாரங்களை அடிக்கடி தொலைபேசி வழியாகவும், நேரில் எப்போதெல்லாம் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் பரந்த அளவில் பேசி விவாதிப்பது உண்டு.

தற்போது உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் பிரச்சினை, வல்லரசு நாடான அமெரிக்காவையும், அதன் தோழமை நாடான இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.இந்தியாவில் கொரோனா வைரசுக்கான பரிசோதனைக்கூட வசதிகளை ஏற்படுத்துவதில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவுடன் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சமீபத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். டிரம்ப் நிர்வாகத்துடன் அங்குள்ள இந்திய தூதரகமும் தொடர்பில் இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைபேசியில் அவசரமாக தொடர்பு கொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினார்.

கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுப்பதற்காக இருநாடுகளும் மேற்கொண்டு வருகிற நடவடிக்கைகளை இரு தலைவர்களும் பரஸ்பரம் தெரிவித்து விவாதித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் கொரோனா வைரசுக்கு எதிராக போராட இந்தியாவும், அமெரிக்காவும் இரு தரப்பு கூட்டாளித்துவத்தை முழுமையாக பயன்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்த தொலைபேசி வழி ஆலோசனை குறித்து பிரதமர் மோடி, டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

ஜனாதிபதி டிரம்புடன் விரிவான தொலைபேசி உரையாலை நடத்தினேன். நாங்கள் நல்லதொரு ஆலோசனையை நடத்தினோம். கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்த ஒப்புக்கொண்டோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ள நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை 7,100-ஐ தாண்டி உள்ளது.

இதே போன்று இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3,100-ஐ எட்டும் நிலை இருப்பதுவும், பலி எண்ணிக்கை 100 என்ற எண்ணிக்கையை நோக்கி செல்வதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com