

வாஷிங்டன்,
அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு டிரம்ப் பொறுப்பேற்றார். அதன்பிறகு அந்நாட்டின் குடியேற்ற கொள்கையில் திருத்தம், மானியம் ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தனது பேச்சை கேட்காத உலக நாடுகள் மீது அதிக வரி விதிப்பதாக அச்சுறுத்தல் விடுத்த அவர், சீனா, கனடா, மெக்சிகோ, இந்தியா உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது கடுமையான வரிகளை விதித்தார்.
இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ஐ அதிபர் டிரம்ப் பயன்படுத்தினார். வர்த்தக பற்றாக்குறையை குறைத்து அமெரிக்காவில் அதிக உற்பத்தியை ஊக்குவிப்பதே தனது குறிக்கோள் என்று அவர் கூறினார். மேலும், வருவாயை உயர்த்தவும், வர்த்தக பேச்சுவார்த்தைகளில் மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் அவர் வரி விதிப்பு நடவடிக்கையை பயன்படுத்தினார்.
இதற்கிடையில், அமெரிக்காவில் உள்ள சில மாகாண அரசுகள், விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம், ஒயின் இறக்குமதி நிறுவனம் உள்ளிட்ட சிறு வணிக நிறுவனங்களின் குழுக்கள் இணைந்து, டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வரி விதிப்பு நடவடிக்கைக்கு, அரசியலமைப்பு விதிகளை மீறி நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை டிரம்ப் தவறாக பயன்படுத்தியுள்ளார் என அவர்கள் குற்றம்சாட்டினர்.
டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால், இறக்குமதி பொருட்களை நம்பியுள்ள வணிக நிறுவனங்களின் செயல்பாடுகள் சீர்குலைந்து, விலையேற்றம் மற்றும் பணி நீக்க நடவடிக்கைகளுக்கு வழிவகுத்ததாக கோர்ட்டில் வாதிடப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு அமெரிக்க பெடரல் சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977, விரிவான வரி விதிப்பை அங்கீகரிக்கவில்லை என்று தீர்ப்பளித்தது. ஆனால் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளை சட்டம் அனுமதிக்குமா என்பதை முடிவு செய்ய மறுத்துவிட்டது.
இதனிடையே, டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது என 3 கீழமை நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது என அதிரடியாக தீர்ப்பு கூறியுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளி நாடுகள் மீது கடுமையான இறக்குமதி வரிகளை விதித்ததன் மூலம் அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறியுள்ளார் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தபோது, டிரம்ப் நிர்வாகம் அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-க்கு மாற்றாக வரி விதிப்புக்கான மாற்று வழிகளை ஆராயத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.