

அகர்தலா,
மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசிக்கும் ராகின் பகுதியில் கடந்த ஆகஸ்டு 25ந்தேதி அந்நாட்டு ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து அங்கிருந்து 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் தப்பி வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.
மியான்மரில் ராணுவத்தின் கடும் நடவடிக்கையால் ஒரே மாதத்தில் 6 ஆயிரத்து 700 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதில், 5 வயதிற்கு உட்பட்ட 730 குழந்தைகள் உள்பட 6,700 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா, மியான்மர் ராணுவத்தின் இந்நடவடிக்கையை சிறுபான்மை முஸ்லிம் மக்களின் இன அழிப்பு நடவடிக்கை என கூறியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் புதுடெல்லியில் அமைந்துள்ள சர்வதேச புத்தமத கூட்டமைப்பு மியான்மரில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் தம்மப்பியா இன்று கூறும்பொழுது, வன்முறை மற்றும் சகிப்பின்மையை எந்த வடிவிலும் புத்த மதம் அனுமதிக்காது என கூறியுள்ளார். மியான்மர் நாட்டின் துறை சார்ந்த நபர்களிடம் அவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். அனைவரையும் மனிதர்களாக நடத்துங்கள். அங்கு அமைதி மற்றும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துங்கள் என கேட்டு கொண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
ரோஹிங்கியா முஸ்லிம்களை பூர்வகுடி மக்களாக மியான்மர் அங்கீகரிக்கவில்லை. அவர்கள் வங்காளதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து சட்டவிரோத முறையில் மியான்மரில் வாழ்ந்து வருகிறார்கள் என அந்நாடு தெரிவித்துள்ளது.