இந்தோனேசியாவில் சுனாமி பாதிப்பு; பலி எண்ணிக்கை 429 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் சுனாமியில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 429 ஆக உயர்வடைந்து உள்ளது.
இந்தோனேசியாவில் சுனாமி பாதிப்பு; பலி எண்ணிக்கை 429 ஆக உயர்வு
Published on

சுமுர்,

இந்தோனேசியாவில் கடந்த சனிக்கிழமை இரவு எரிமலை வெடிப்பால் சுனாமி ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது. அங்கு ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே ஜாவா கடலை, இந்தியப்பெருங்கடலுடன் இணைக்கிற சுந்தா ஜலசந்தி உள்ளது. அந்த ஜலசந்தியில் அமைந்துள்ள அனக் கிரகட்டாவ் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ராட்சத சுனாமி அலைகள் எழுந்தன. இந்த பேரலைகள் அந்த நாட்டில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன.

சுமத்ரா தீவில் செராங் மாவட்டம், தெற்கு லாம்பங், டாங்கமஸ் ஆகிய இடங்களில் பெருத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சுனாமி பேரலைகளில் கட்டிடங்களுடன் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களும் அடித்துச்செல்லப்பட்டன.

சுனாமி பற்றி எந்த முன்னெச்சரிக்கையும் விடப்படவில்லை. பல மரங்கள் வேருடன் சாய்ந்தன. சாலைகளில் அவை விழுந்து போக்குவரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தின. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாக தவித்து வருகின்றனர்.

சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்பாக 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி, இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி பேரழிவுகளை ஏற்படுத்தி, லட்சக்கணக்கானோரின் உயிர்களை பறித்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகின.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com