சிரியா அகதிகளின் அதிகமான எண்ணிக்கையை துருக்கியால் கையாள முடியாது - அதிபர் எர்டோகன்

அதிக அளவில் வரும் சிரியா நாட்டின் அகதிகளை துருக்கியால் கையாள முடியாது என்று அந்நாட்டின் அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
சிரியா அகதிகளின் அதிகமான எண்ணிக்கையை துருக்கியால் கையாள முடியாது - அதிபர் எர்டோகன்
Published on

அங்காரா,

சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்திற்கு எதிரான உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. சர்வதேச நாடுகளின் உதவியுடன் பல்வேறு குழுவினர் சிரியாவில் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போரில் சிரியா நாட்டு மக்கள் பலர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

2011 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 36 லட்சத்திற்கும் அதிகமான சிரியா நாட்டு மக்கள் துருக்கியில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

மேலும் வடகிழக்கு சிரியாவில் உள்ள இட்லிப் மாகாணத்தில் நிகழ்ந்து வரும் வன்முறைகளால் அங்கிருந்து சுமார் 80,000 பேர் அகதிகளாக துருக்கி எல்லைக்கு வந்திருப்பதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல் நகரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அதிபர் எர்டோகன், சிரியாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் அகதிகளாக வரும் மக்களை துருக்கியால் கையாள முடியாது. இட்லிப் மாகாணத்தில் நிகழ்ந்து வரும் வன்முறை ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால் அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

துருக்கி மட்டுமல்லாது கிரீஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கையை கையாள முடியாத நிலை ஏற்படும் என்று கூறினார்.

கடந்த அக்டோபர் மாதம் அதிபர் எர்டோகன், துருக்கியில் உள்ள சிரியா அகதிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்கள் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com