

இஸ்தான்புல்,
சிரியாவில் அல்-பாப் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறி வைத்து துருக்கி ஆதரவு படைகள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் இன்றும் தொடர்ந்தது. இது பற்றி துருக்கி நாட்டு ராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் கூறும்பொழுது, சிரியாவின் அல்-பாப் நகரில் நிலக்கண்ணிவெடிகள் மற்றும் வெடிகுண்டுகளை நீக்கும் பணியில் துருக்கி ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இதில், துருக்கி ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் காயமடைந்துள்ளனர் என கூறினார்.
அல்-பாப் நகரின் குடியிருப்பு பகுதிகள் பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதனையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
துருக்கி எல்லையில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் அல்-பாப் நகர் உள்ளது. இந்நகரம் ஐ.எஸ். அமைப்பினரின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக இருந்து வந்தது. இதனை தொடர்ந்து அவர்களை வெளியேற்றவும் மற்றும் அவர்களுடனான குர்தீஷ் படையினரின் தொடர்பினை தடுக்கும் வகையிலும் கடந்த ஆகஸ்டில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் சிரிய பழங்குடியினருடன் இணைந்து துருக்கி ராணுவமும் ஈடுபட்டது.
இந்நிலையில், அல்-பாப் பகுதியில் இன்று நடந்த பீரங்கி மற்றும் வான்வழி தாக்குதல்களில் ஐ.எஸ். அமைப்பின் 15 போராளிகள் கொல்லப்பட்டனர். கூட்டு படையினரின் வான்வழி தாக்குதல்களில் 4 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன் 29 போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.