

ரியாத்,
தமிழக முதல்-அமைச்சர் விஜய் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் மக்கள் பணியாற்ற வேண்டி, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் த.வெ.க. எம்.எல்.ஏ. முஸ்தபா மொட்டை அடித்து சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
மதுரை மத்திய தொகுதி தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் முஸ்தபா. இவர் புனித பயணமாக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு சென்றுள்ளார். அங்கு காபா முன்பு நின்றபடி, அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், முதல்-அமைச்சர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் விஜய், இன்னும் பல ஆண்டுகள் மக்களுக்கான பணிகளை தொடர்ந்து ஆற்றிட வேண்டும் என்றும், இந்திய மக்கள் அனைவரும் சாந்தியும் சமாதானமும் பெற்று வாழவும் பிரார்த்தனை செய்ததாக அந்த வீடியோவில் முஸ்தபா எம்.எல்.ஏ. குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.