

வாஷிங்டன்,
ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட இரட்டை சகோதரிகள், தங்களது உடலில் சராசரியாக 70 சதவீதப் பகுதிகளில் பச்சை குத்திக்கொண்டு, 'உலகின் அதிக பச்சை குத்திக்கொண்ட பெண் இரட்டையர்கள்' என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர்.
ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகருக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட இரட்டை சகோதரிகள் அலைன் காலியானோ மற்றும் அலீனா ஹான்லே. இவர்கள், சிறுவயதில் தங்களது அம்மாவிடம் தலா ஒரே ஒரு டாட்டூ மட்டுமே குத்திக்கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், முதல் டாட்டூ குத்திய பிறகு ஏற்பட்ட அதீத ஆர்வத்தால், தங்களது உடலின் பெரும்பகுதியை வண்ணமயமான ஓவியங்களால் நிரப்பத் தொடங்கினர். ஆரம்பத்தில் இதற்குத் தயங்கிய இவர்களின் தாயார், இவர்களின் மிகப்பெரிய ஆதரவாளராக மாறிவிட்டார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் இவர்கள், 'பெட்டூனியா ட்வின்ஸ்இங்க்' என்ற பெயரில் சொந்தமாக டாட்டூ ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 2025-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் கின்னஸ் போட்டி நடைபெற்றது. அதில் தங்களது உடலில் சராசரியாக 70 சதவீதப் பகுதிகளில் பச்சை குத்திக்கொண்ட அதிகாரப்பூர்வ அளவீட்டின் மூலம் இவர்களின் சாதனை உறுதி செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைத்தனர். இதையடுத்து 'கின்னஸ் உலக சாதனைகள் 2027' புத்தகத்திலும் இவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இருவரும் ஒருவருக்கொருவர் மாதம் ஒரு முறையாவது புதிய டாட்டூக்களைப் போட்டுக்கொள்வதால், இவர்களின் உடலில் உள்ள பச்சைக் குத்தல்களின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சமூக வலைதளங்களிலும் 'பெட்டூனியா ட்வின்ஸ்' என்ற பெயரில் இவர்கள் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ளனர்.