உள்நாட்டுப்போர் நடந்து வரும் நிலையில் ஏமனில் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்

ஏமனில் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை வெளிநாட்டுக்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை மூலம் பிரித்து காப்பாற்ற வேண்டும் என்ற குரல் அங்கு வலுத்து வருகிறது.
உள்நாட்டுப்போர் நடந்து வரும் நிலையில் ஏமனில் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்
Published on

சனா,

ஏமன் நாட்டில் அதிபர் அப்தரபு மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி தொடங்கி உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. தலைநகர் சனா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ளது. அங்குள்ள விமான நிலையம் பெரும் சேதம் அடைந்து மூடப்பட்டுள்ளது.

இந்த தருணத்தில் அங்குள்ள அல் சபீன் ஆஸ்பத்திரியில் ஒரு பெண்ணுக்கு கடந்த புதன்கிழமையன்று இரட்டை ஆண் குழந்தைகள் ஒட்டிப்பிறந்துள்ளன. இந்த குழந்தைகள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், வெளிநாடுகளில் மட்டுமே செய்யக்கூடிய அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி அந்த ஆஸ்பத்திரியின் இயக்குனர் மஜ்தா அல் காதிப் கூறுகையில், ஒட்டிப்பிறந்துள்ள இந்த இரட்டைக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இதயம் இருப்பதை எக்கோகார்டியோகிராம் பரிசோதனை காட்டுகிறது. ஆனால் அவர்களில் ஒருவருடைய இதயம் சாதாரணமானது அல்ல. இவர்களுக்கு எந்தெந்த உறுப்புகள் இணைந்துள்ளன என்பதை துல்லியமாக தீர்மானிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் எங்கள் ஆஸ்பத்திரியில் இல்லை என குறிப்பிட்டார்.

இந்த குழந்தைகளை வெளிநாட்டுக்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை மூலம் பிரித்து காப்பாற்ற வேண்டும் என்ற குரல் அங்கு வலுத்து வருகிறது. இது குறித்து மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவ நிபுணர்கள் இதுகுறித்து பரிசீலித்து, இந்த குழந்தைகளை அறுவை சிகிச்சை செய்து பிரித்தெடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கு தயாராக உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com