

காத்மண்டு,
தாய்லாந்தில் இருந்து நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு நேற்று மாலை கேத்தே பசிபிக் விமானம் வந்தது. காத்மண்டு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய நிலையில் அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அதிகாரிகளின் சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த 2 பயணிகள் விமான நிலையத்தில் இருந்து தப்பியோட முயற்சித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக அந்த 2 பயணிகளையும் விரட்டிப்பிடித்து அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனை செய்தனர். அப்போது அந்த பைகளில் 18 கிலோ கஞ்சா இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, 2 பயணிகளையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் (வயது 36), ரவிக்குமார் (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரின் செல்போன்கள், பாஸ்போர்ட்டுகள், பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் , இருவரையும் சிறையில் அடைத்தனர். மேலும், கஞ்சா கடத்தி வந்த இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.