

பாங்காக்,
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிய வெளியுறவு மந்திரிகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ உள்பட ஆசிய நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு பாங்காக்கில் பிராதுனம் என்ற இடத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அருகே 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்து சிதறின. இதில் அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு நாராதிவத் பகுதியில் உள்ள ரெயில் நிலையம் அருகே 2 குண்டுகளும், 9.30 மணியளவில் அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள கிங் ராமா வீதியில் 2 குண்டுகளும் அடுத்தடுத்து வெடித்து சிதறின. எனினும் இந்த குண்டுவெடிப்புகளில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 3 மணி நேரத்தில் அடுத்தடுத்து 7 குண்டுகள் வெடித்ததால் பாங்காக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குண்டு வெடிப்பு நடந்த இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சான் ஓசா உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் எனவும், அதே சமயம் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக் கப்பட்டுள்ளதால் பொதுமக் கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.