

கனடாவின் சர்ரே நகரில் உள்ள வால்மார்ட் கடையின் வாகன நிறுத்துமிடத்தில் இந்திய வம்சாவளியைச் இருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில் கடந்த 15-ந்தேதி இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. வால்மார்ட் கடையின் வாகன நிறுத்துமிடத்தில் ஆண், பெண் இருவர் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரும், அவசர மருத்துவக் குழுவினரும் இருவரையும் மீட்க முயன்றனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் 23 வயதான ககன்பிரீத் ரெஹால், 24 வயதான சுக்ஜீத் கவுர் என்பது தெரியவந்தது. இருவரும் சர்ரே நகருக்கு அருகில் உள்ள டெல்டா பகுதியைச் சேர்ந்தவர்கள்.
துப்பாக்கி சூடு தொடர்பாக கனடாவின் ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இந்த துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், இதற்கு பின்னால் கிரிமினல் கும்பல்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கி சூடு நடந்த சுமார் 13 நிமிடங்களுக்குப் பிறகு, அருகில் உள்ள பிரின்சஸ் டிரைவ் பகுதியில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த கார் துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய வாகனமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.