

நைரோபி,
கென்யாவில் 18 மாடிகளைக் கொண்ட பிரமாண்ட அடுக்குமாடிக்கட்டிடம் இடிந்தது. இதில் சிக்கிய 5 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
கென்யா தலைநகரான நைரோபியில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஈடுகொடுக்க, நகரின் பல பகுதிகளில் வானளாவிய வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இத்தகைய கட்டுமானப் பணிகளுக்கு மத்தியில், அங்கு பாதுகாப்பு விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்படுவதாகப் புகார்களும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், நைரோபியின் கிழக்குப் பகுதியில் உள்ள, சோமாலிய மக்கள் அதிகம் வசிக்கும் மிக நெரிசலான ஈஸ்ட்லீ வணிக வளாகப்பகுதியில் 18 மாடிகள் கொண்ட பிரமாண்ட அடுக்குமாடிக்கட்டிடம் ஒன்று ஓராண்டாக கட்டப்பட்டு வந்தது. அங்கு வழக்கம்போல கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, அந்தக் கட்டிடம் திடீரென பயங்கர சத்தத்துடன் சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழுந்தது.
கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் அந்தப் பகுதியே பெரும் புகைமண்டலமாகக் காட்சியளித்தது. இதில் அடித்தளத்தில் இருந்த கடைகளில் பணியாற்றியவர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் என சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். விபத்து நடந்த சமயம் தொழுகை நேரம் என்பதால், கட்டிடத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களில் 66 பேர் மசூதிக்குச் சென்றிருந்தனர்.
இதனால் அவர்கள் அனைவரும் நூலிழையில் உயிர் தப்பினர். எனினும், கட்டிடத்தின் அடித் தளத்தில் கடைகளில் இருந்தவர்கள் மற்றும் சில தொழிலாளர்கள் என மொத்தம் 7 பேர் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் ராட்சத எந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றி, உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டநிலையில் 5 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இடிபாடுகளுக்குள் உயிருடன் இருப்பவர்களிடம் மீட்புக்குழுவினர் பேசி வரும் நிலையில், மீட்புப் பணிகள் ராணுவ உதவியுடன் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நைரோபியில் இது போன்ற கட்டிட விபத்துகள் ஒரு தொடர்கதையாகவே மாறி வருகின்றன. கென்ய பொதுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 86 கட்டிடங்கள் இடிந்து விழுந்து. சுமார் 200 பேர் பலியாகியுள்ளனர்.
லஞ்சம் மற்றும் முறையற்ற அனுமதிகளே இந்த விபத்துகளுக்குக் காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டும் நிலையில், இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த கென்ய உள்துறை மந்திரி கிப்சும்பா முர்கோமென் உத்தரவிட்டுள்ளார்.