பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட ‘ராய்’ புயல்: பலி எண்ணிக்கை 208 ஆக உயர்வு..!

பிலிப்பைன்ஸ் நாட்டை ‘ராய்’ என்கிற சக்தி வாய்ந்த புயல் புரட்டிப்போட்டு விட்டது. இதன் காரணமாக பலி எண்ணிக்கை தற்போது 208 ஆக உயர்ந்துள்ளது.
பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட ‘ராய்’ புயல்: பலி எண்ணிக்கை 208 ஆக உயர்வு..!
Published on

மணிலா,

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்களை ராய் என்கிற அதிக சக்தி வாய்ந்த புயல் புரட்டிப்போட்டுள்ளது. மணிக்கு 121 கி.மீ. முதல் 168 கி.மீ. வரை சூறாவளி காற்று சூழன்றடித்தது. இதனால் சமீபத்திய ஆண்டுகளில் பிலிப்பைன்சை தாக்கிய மிகவும் சக்தி வாய்ந்த புயலாக இது பார்க்கப்படுகிறது.

2 நாட்களாக வீசிய புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. புயல் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் பல காற்றில் அடித்து செல்லப்பட்டு கடலில் மூழ்கின.

புயலைத் தொடர்ந்து பேய் மழை கொட்டித் தீர்த்தது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. அதேபோல் புயல் காரணமாக 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் மின்வினியோகம் தடைபட்டு உள்ளது. தகவல் தொடர்பு சேவையும் முடங்கி உள்ளது.

மேலும் புயலை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் நாசமாயின. இந்த புயல் காரணமாக சுமார் 8 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ராய் புயல் காரணமாக தற்போது 208 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 52 பேர் மாயமாகி உள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புயல் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com