இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் கோதுமையை மறுஏற்றுமதி செய்ய தடை - ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி உத்தரவு

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் கோதுமை மற்றும் கோதுமை மாவை ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் கோதுமையை மறுஏற்றுமதி செய்ய தடை - ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி உத்தரவு
Published on

துபாய்,

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இறக்குமதியாகும் கோதுமை மற்றும் கோதுமை மாவை ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அமீரகத்தையும் இந்தியாவையும் இணைக்கும் திடமான உறவுகளைப் பாராட்டும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மே 13ஆம் தேதிக்கு முன்னர், இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்தியாவில் உற்பத்தியாகும் கோதுமையை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அல்லது மறுஏற்றுமதி செய்ய விரும்பும் அமீரக நாட்டு நிறுவனங்கள், அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு அமைச்சகத்திடம் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

உரிய அனுமதி கிடைத்த பிறகு மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மற்றும் கோதுமை மாவை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா-உக்ரைன் போர் வெடித்ததை அடுத்து, அமீரகத்துக்கு ரஷியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்வது தடைபட்டது. இந்த நிலையில், கோதுமை இறக்குமதிக்கு ரஷியாவிற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகம் இப்போது இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது.

மே 13 அன்று கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை தொடர்ந்து, ஐந்து நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட இந்தோனேசியா, ஓமன், பங்களாதேஷ் மற்றும் ஏமன் ஆகிய 5 நாடுகள் தூதரக வழிகளில் இந்திய அரசிடம் கோதுமையை ஏற்றுமதி செய்யுமாறு கோரிக்கையை முன்வைத்தன. இருப்பினும், அத்தகைய கோரிக்கைகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழு இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com