

அபுதாபி,
பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக இன்று (மே 15) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மோடி சென்றடைந்தார்.
மோடி தனது ஏர் இந்தியா 1 விமானத்தில் பயணமானார். அவரை தங்கள் வான்வெளிக்குள் வரவேற்க ஐக்கிய அரபு அமீரகம் தனது ஏர் போர்ஸ் F-16 உள்ளிட்ட போர் விமானங்களை அனுப்பியது. வான்வெளியில் பிரதமர் மோடிக்கு புடை சூழ அமீரக போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்தது. அதன் வழிகாட்டுதலுடன் மோடி அபு தாபியில் தரையிறங்கினார்.
அவருக்கு ஏகபோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் வரவேற்று கவுரவித்து அழைத்து சென்றார்.தொடர்நது இரு தலைவர்களும் இரு நாட்டு உறவுகள் மற்றும் நலன்கள் குறித்து உரையாடினர். இதன்போது தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
குறிப்பாக ஏர் போர்ஸ் விமானம் தனது விமானத்துக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டது குறித்து நெகிழ்ந்த அவர், இது இந்திய மக்களுக்கு கிடைத்த பெருமை என்று தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகம் தனது இரண்டாவது வீடு போன்றது என்றும் மோடி சிலாகித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
அமீரகத்துடன் எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, கப்பல் போக்குவரத்து மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் போன்ற முக்கியத் துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
இது இந்தியா-
ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவுக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளது. மேலும், இந்தியாவில் 5 பில்லியன் டாலர் அளவுக்கு
ஐக்கிய அரபு அமீரகம் முதலீடு செய்யவுள்ளது. இது பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என அதில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் எரிபொருள் விலைகளை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ள நிலையில் எண்ணெய் வளம் மிக்க ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மோடியின் பயணம் கவனம் பெற்றுள்ளது.
தொடர்ந்து மே 15-17 நெதர்லாந்து செல்லும் மோடி, மே 17-18 ஸ்வீடனில் இருப்பார். அதைத்தொடர்ந்து மே 19 இல் நார்வேவின் ஓஸ்லோவில் நடக்கும் இந்தியா - நார்டிக் உச்சிமாநாட்டில் கலந்துகொள்கிறார்.