அமீரக நிலவு பயண திட்டம்: ராஷித் ரோவர் தரையிறங்க ‘லேக் ஆப் டிரிம்ஸ்’ என்ற பகுதி தேர்வு

அமீரக நிலவு பயண திட்டத்தில் ராஷித் ரோவர் வாகனம் தரையிறங்கும் நிலப்பகுதியானது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அமீரக நிலவு பயண திட்டம்: ராஷித் ரோவர் தரையிறங்க ‘லேக் ஆப் டிரிம்ஸ்’ என்ற பகுதி தேர்வு
Published on

இது குறித்து அமீரக நிலவு பயண திட்ட மேலாளர் டாக்டர் ஹமத் அல் மர்சூகி அளித்த பேட்டியில்கூறியதாவது:-

தரையிறங்கும் பகுதி தேர்வு

அமீரகத்தின் சார்பில் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் நிலவில் சென்று ஆராய்ச்சி செய்யும் ராஷித் ரோவர் வாகனம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனம் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வரும் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ளது.இந்நிலையில் தற்போது இந்த ராஷித் ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கும் பகுதியானது தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள நிலவின் நிலப்பரப்புக்கு லத்தீன் மொழியில் லாகஸ் சோம்னியோரம் என்ற பெயரிடப்பட்டுள்ளது. இது லேக் ஆப் டிரீம்ஸ் என்ற ஆங்கில பெயரால் அழைக்கப்படுகிறது. இது நிலவின் முன் பகுதியில் அமைந்துள்ள இடமாகும். கரடு முரடாக இல்லாமல் இருப்பதன் காரணமாக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலப்பரப்பு தனித்துவமான மண் கலவையை பெற்றுள்ளது. குறிப்பாக பாசல்டிக் எனப்படும் எரிமலை குழம்புகளால் இது உருவாகியுள்ளது. அதன் காரணமாக லேசான சிவப்பு நிறத்தில் இந்த பரப்பு காணப்படும்.

3 மாதங்கள் பயணம்

ஒருவேளை இந்த பகுதியில் தரையிறங்க முடியாவிட்டால் மாற்று ஏற்பாடாக இன்னும் 3 இடங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது மாதிரி ராஷித் ரோவர் வாகனத்தின் செயல்பாடுகளின் சோதனைகள் நிறைவடைந்த பிறகு உண்மையான வாகனம் தயார் செய்யப்படும். குறைந்த எரிபொருளில் நீண்ட தொலைவு பயணத்தில் செல்லும் வகையில் ஜப்பான் நாட்டின் ஐ ஸ்பேஸ் நிறுவனம் சார்பில் லேண்டர் வாகனம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த லேண்டர் வாகனம்தான் ராஷித் ரோவரை சுமந்து சென்று தரையிறக்குகிறது. அடுத்த 2022-ம் ஆண்டில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் லேண்டர் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. பூமிக்கு அருகில் நிலவு சரியான தொலைவில் வரும்போது ராக்கெட் விண்வெளியில் ஏவப்படும். இதில் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விண்ணில் ஏவப்பட்டால் நவம்பர் வரை 3 மாதங்கள் விண்ணில் பயணம் செய்து நிலவை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com