ஏ.ஐ. உதவியுடன் இந்தியாவில் 8 நவீன சூப்பர் கம்ப்யூட்டர்களை நிறுவ அமீரகம் திட்டம்

சூப்பர் கம்ப்யூட்டர் என்பது சாதாரண கணினிகளை விட ஆயிரக்கணக்கான மடங்கு திறன் கொண்டதாகும்.
ஏ.ஐ. உதவியுடன் இந்தியாவில் 8 நவீன சூப்பர் கம்ப்யூட்டர்களை நிறுவ அமீரகம் திட்டம்
Published on

அபுதாபி,

அமீரகம் சார்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியாவில் நவீன 8 எக்ஸோபிளாப் சூப்பர் கம்ப்யூட்டர்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அமீரக அரசு டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் அறிவிப்பை வெளியிட்டது.

சூப்பர் கம்ப்யூட்டர்

சூப்பர் கம்ப்யூட்டர் என்பது சாதாரண கணினிகளை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதி விரைவாக கணக்கீடுகளை செய்யக்கூடிய மிக உயர் திறன் கொண்ட கம்ப்யூட்டர் அமைப்பாகும். இவைகள் வினாடிக்கு கோடிக்கணக்கான கணக்குகளை தாண்டி டிரில்லியன், குவாட்ரில்லியன் அளவில் கணக்குகளை செய்யக்கூடியவை ஆகும்.

சூப்பர் கம்ப்யூட்டர்களில் வெக்டார் பிராசஸ்சிங் எனப்படும் விஞ்ஞான கணக்குகளுக்கான வகை, ஆயிரக்கணக்கான பிராசஸ்சர்களை இணைத்து வேலை செய்யும் மேசிவ்லி பேரலல் பிராசசிங் கம்ப்யூட்டர். பல சாதாரண கணினிகளை இணைத்து ஒரே அமைப்பாக செயல்படும் கிளஸ்டர் சூப்பர் கம்ப்யூட்டர் மற்றும் வினாடிக்கு 10¹⁸ இலக்கங்களில் கணக்குகளை எளிதாக செய்யும் தற்போதைய உலகின் எக்ஸோபிளாப் சூப்பர் கம்ப்யூட்டர் என பல வகைகள் உள்ளன. இதில் எக்ஸோபிளாப் சூப்பர் கம்ப்யூட்டரை இந்தியாவில் நிறுவ அமீரகம் முடிவு செய்துள்ளது.

சிறப்பம்சங்கள்

இதற்கான அறிவிப்பு டெல்லியில் நடக்கும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டது. எக்ஸ்போபிளாப் கம்ப்யூட்டரின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு;

10¹⁸ கணக்குகள் என்பது கணினி திறனை அளக்கும் மிக உயர்ந்த அளவாகும். அதாவது 1 என்ற எண்ணுக்கு பிறகு 18 இலக்க எண்கள் வரும். இதனை ஒரு குவிண்டில்யன் (100 பில்லியன் கோடி) என அழைக்கின்றனர்.

இந்த அளவிலான கணக்குகளை எக்ஸோபிளாப் சூப்பர் கம்ப்யூட்டர்களால் மட்டுமே முடியும். சாதரண லேப் டாப் வினாடியில் 100 கோடி வரையிலான கணக்குகளை எளிதாக செய்யும்.

அதற்கு மேல் குவிண்டில்யன் அளவிலான கணக்குகளை செய்ய சாதாரண கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்கள் சுமார் 3 ஆண்டுகளை எடுத்துக்கொள்ளும். அதனையே எக்ஸ்போபிளாப் சூப்பர் கம்ப்யூட்டர் ஒரே ஒரு வினாடியில் செய்து முடிக்கும்.

அதிக அளவிலான பெரிய இலக்கங்களை கணக்கீடு செய்வதால் என்ன நன்மை? என கேட்பவர்களுக்கு காலநிலை முன் அறிவிப்பு, புற்றுநோய் ஆராய்ச்சி, விண்வெளி மாதிரிகள், அணு ஆராய்ச்சி, பெரிய தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிற்சிகளில் மிகப்பெரிய தரவுகளை கையாள இதனால் முடியும். குறிப்பாக இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு சேவை அளிக்கும் பயன்பாடுகளுக்கு இதுபோன்ற சூப்பர் கம்ப்யூட்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், அமைச்சகங்கள் வரை இதன் சேவை அணுக கூடியதாக இருக்கும். இதுபோன்ற 8 எக்ஸ்போபிளாப் சூப்பர் கம்ப்யூட்டர்கள் அபுதாபியில் உருவாக்கப்பட உள்ளன. இதில் அமீரகத்தின் ஜி42 தொழில்நுட்ப நிறுவனம், முகம்மது பின் ஜாயித் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (சி-டிஏசி) ஆகியவை இணைந்து பணியாற்ற உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com