அமீரகத்தின் கலிப் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது: துணை அதிபர் பாராட்டு

அமீரகத்தின் தொழில்முனைவோர்கள் இணைந்து உருவாக்கிய ‘கலிப்’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த சாதனைக்கு அமீரக துணை அதிபர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமீரகத்தின் கலிப் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது: துணை அதிபர் பாராட்டு
Published on

விண்ணில் ஏவப்பட்டது

அமீரகத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களை நடத்தி வரும் தொழில்முனைவோர்கள் இணைந்து வன உயிரினங்களை கண்காணிக்கும் செயற்கைக்கோளை உருவாக்கினர். கலிப் என்ற பெயரில் உருவான இந்த செயற்கைக்கோள் மனிதர்களால் தொடர்பு கொள்ள முடியாத பகுதிகளில் வசிக்கும் பறவைகள் மற்றும் விலங்குகளை கண்காணிக்க பெரிதும் உதவியாக இருக்கும் என அந்த குழுவினர் குறிப்பிட்டனர்.அமீரகத்தை சேர்ந்த இளம் தொழில்நுட்ப வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட கலிப் செயற்கைக்கோள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கார்னிவல் விண்வெளி

மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 என்ற ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.இந்த செயற்கைக்கோள் விண்ணில் இருந்து தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு சிக்னலை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. பறவைகள் மற்றும் விலங்கினங்கள் வெகு தொலைவான வனப்பகுதிகளில் உலாவருவது மற்றும் இடம்பெயர்வதை இந்த செயற்கைக்கோள் கண்காணிக்கும்.

துணை அதிபர் பாராட்டு

இந்த சாதனைக்கு அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

அமீரகத்தில் விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த செயற்கைக்கோள் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இளம் விஞ்ஞானிகள் குழுவினர் இன்று வெற்றிகரமாக கலிப் செயற்கைக்கோளை உருவாக்கி விண்ணில் ஏவியுள்ளனர். வனவிலங்குகளை கண்காணிக்க அமீரக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் இதுவாகும். இனி அமீரக இளைஞர்களின் லட்சியங்கள் மற்றும் இலக்குகள் எப்போதும் வானுயர்ந்து இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சாதனைக்கு பல தரப்பினரும் சமூக ஊடகங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com