

லண்டன்
இங்கிலாந்தில் இந்திய உணவு விடுதி மீது தீ வைத்து எரித்த வழக்கில் 2 சிறுவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கேன்ட்ஸ் ஹில் பகுதியில் இந்தியன் அரோமா என்ற பெயரில் இந்திய உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஒரு கும்பல், திருடி கொண்டு வந்த காரில் இருந்து இறங்கினர். அவர்கள் கத்தி உள்பட ஆயுதங்களை தூக்கிக்கொண்டு அந்த விடுதிக்குள் புகுந்தனர். உள்ளே 8 பேர் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அவர்களிடம், யாரும் எழுந்து போக கூடாது என அந்த கும்பல் உத்தரவிட்டது. பின்னர், அந்த கும்பலில் சிலர் விடுதி கதவை மூடி விட, ஒருவர் அறை முழுவதும் பெட்ரோல் ஊற்றி, தீயை பற்ற வைத்துள்ளார். இதன்பின்பு, அந்த காரிலேயே கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி சென்றனர்.
இதில், உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள் பலர் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கு லண்டனில் உள்ள தி ஓல்டு பெய்லி கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதி மைக்கேல் கிரீவ், சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயது சிறுவர்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளார்.