இங்கிலாந்து பைசர் தடுப்பூசியால் ஒவ்வாமை: சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி மூலம் இரண்டு இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் ஒவ்வாமைக்கு ஆளானதை அடுத்து, இங்கிலாந்து சுகாதாரத் துறை இன்று ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது.
Image courtesy : AFP
Image courtesy : AFP
Published on

லண்டன்,

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரிக்கும் ஆய்வுப்பணிகள் பல்வேறு உலக நாடுகளில் நடந்து வருகிறது. சோதனை முயற்சியில் சில நாடுகள் தடுப்பூசியை மனிதர்களின் உடலில் செலுத்தி ஆய்வு நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இங்கிலாந்து அரசு முதன் முதலில் கொரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அண்மையில் ஒப்புதல் அளித்தது. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்தத் தடுப்பூசி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என இங்கிலாந்து அரசு அறிவித்திருந்தது. இரண்டு டோஸ்களாக வழங்கப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் நான்கு கோடி டோஸ்களை இங்கிலாந்து ஏற்கனவே ஆர்டர் செய்துள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது. வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 90 வயதான மார்கரெட் கீனன் என்ற பாட்டிக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வழக்கமாக தடுப்பூசி ஒன்று உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டு, ஆராய்ச்சி நிலையில் இருந்து பயன்பாட்டுக்கு வர 10 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் பைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்துள்ள இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வெறும் பத்தே மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் உள்ள மையங்களில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சில சுகாதார மற்றும் பராமரிப்பு ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி மூலம் இரண்டு இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் ஒவ்வாமைக்கு ஆளானதை அடுத்து, இங்கிலாந்து சுகாதாரத் துறை இன்று ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது.

ஒவ்வாமை உள்ளவர்கள் பைசர்-பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள கூடாது என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com