இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு இன்று முடிவு தெரியும்

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. பிரதமர் தெரசா மே ஆட்சியை தக்க வைப்பாரா என்பது இன்று தெரிந்து விடும்.
இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு இன்று முடிவு தெரியும்
Published on

லண்டன்,

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகும் முடிவை எடுத்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை 19ந் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில், நாட்டில் வலிமையான, ஸ்திரமான தலைமை தேவை என கூறி, பாராளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்த பிரதமர் தெரசா மே (வயது 60) முடிவு செய்தார்.

அவரது முடிவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. எனவே இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் இருந்தாலும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜூன் 8ந் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

பலத்த போட்டி

இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவியது. கன்சர்வேடிவ் கட்சிக்காக பிரதமர் தெரசா மே, தொழிற்கட்சிக்காக ஜெர்மி கார்பின் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர்.

இதற்கு மத்தியில்தான் மான்செஸ்டர் நகரிலும், லண்டன் மாநகரிலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து, நாட்டில் அதிர்வலைகள் ஏற்பட்டன. இதன்காரணமாக இடை இடையே பிரசாரம் நிறுத்தப்பட்டாலும், மீண்டும் தொடர்ந்து நடந்தது.

650 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு

இந்த நிலையில் நேற்று மொத்தம் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் 40 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்கள் இருந்து வருவதால் வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 4 கோடியே 69 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர்.

இந்திய வம்சாவளியினர்

56 பேர் போட்டி

மொத்தம் 3 ஆயிரத்து 304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 56 பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்த பிரித்தி பட்டேல், அலோக் சர்மா, கீத் வாஸ், வீரேந்திர சர்மா, சைலேஷ் வாரா ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவருமே மீண்டும் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு மந்தமாக தொடங்கினாலும் நேரம் செல்லச்செல்ல விறுவிறுப்பு அடைந்தது. பொதுவாக வாக்குப்பதிவு எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியாக நடந்தது.

பிரதமர் தெரசா மே, கணவர் பிலிப்புடன் வந்து பெர்க்ஷயரில் உள்ள சோனிங் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். தொழிற்கட்சி தலைவர் ஜெர்மி கார்பின், வடக்கு லண்டனில் ஹாலோவே பேக்மேன் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் தனது வாக்கை பதிவை செய்தார்.

இரவு 10 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணிக்கு) ஓட்டுப்பதிவு முடிந்தது.

ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது

ஓட்டுப்பதிவு முடிந்த சிறிது நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விட்டது. தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

பிரதமர் தெரசா மே ஆட்சியை தக்க வைப்பாரா என்பது இன்று தெரிந்துவிடும்.

இந்த தேர்தலில் 331 இடங்களை பிடிக்கிற கட்சி, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும்.

தேர்தலுக்கு முந்தைய கடைசி கருத்துக்கணிப்பு, தெரசா மே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கு, ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிற்கட்சியை விட 10 சதவீதம் கூடுதல் ஆதரவு உள்ளதாக காட்டியது. எனவே தெரசா மே ஆட்சியைத் தக்கவைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com