

லண்டன்,
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாளையொட்டி பிரதமர் அலுவலகத்தில் அதிக அளவில் அரசு ஊழியர்கள் திரண்டு விருந்து நிகழ்ச்சி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த லண்டன் போலீசார் கொரோனா விதி முறையை மீறி 12 நிகழ்ச்சிகள் நடைபெற்றதை உறுதி செய்தனர். இந்த விவகாரத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார். மேலும் விதிமுறையை மீறி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக அண்மையில் அவர் அபராதமும் செலுத்தினார். ஆனாலும் இந்த பிரச்சினை அவரை விடாமல் துரத்துகிறது.
அந்த வகையில் தற்போது இந்த விவகாரத்தில் போரிஸ் ஜான்சன் மீது புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தனது பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சியில் மட்டுமே போரிஸ் ஜான்சன் பங்கேற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில், விதிமுறையை மீறி நடந்த 12 விருந்து நிகழ்ச்சிகளில் 6 நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஒரு விருந்து நிகழ்ச்சியை போரிஸ் ஜான்சனே ஏற்பாடு செய்ததாகவும், அந்த நிகழ்ச்சியில் அவரே அனைவருக்கும் மது ஊற்றி கொடுத்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விவகாரத்தில் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.