

குடியரசு தின அணிவகுப்பு
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கடந்த ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வருவதாக இருந்தார். இந்திய குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் இங்கிலாந்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால், அவர் தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார். அவர் வருகிற 26-ந்தேதி இந்தியாவுக்கு வர திட்டம் தயாரிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டு இருந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஐரோப்பா கண்டத்துக்கு வெளியே போரிஸ் ஜான்சன் மேற்கொள்ள இருந்த முதலாவது மிகப்பெரிய இருதரப்பு பயணமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், இந்தியாவில் கடந்த 15 நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டு வருகிறது. போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு நேரில் செல்லாமல், காணொலி காட்சி மூலம் பேசவேண்டும் என்று எதிர்க்கட்சியான லேபர் கட்சி உள்பட பலதரப்பில் இருந்தும் அவருக்கு அழுத்தம் தரப்பட்டது.
அதன் விளைவாக, போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை 2-வது தடவையாக ரத்து செய்துள்ளார். இந்திய-இங்கிலாந்து அரசுகள் சார்பில் இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக, பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் இந்தியாவுக்கு செல்ல மாட்டார். அதற்கு பதிலாக இம்மாத இறுதியில் பிரதமர் மோடியும், போரிஸ் ஜான்சனும் காணொலி காட்சி மூலம் உரையாடுவார்கள்.இரு நாடுகளின் எதிர்கால கூட்டுக்கான திட்டங்கள் குறித்து விவாதிப்பார்கள்.அதன்பிறகும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், இந்த ஆண்டு இறுதியில் நேரில் சந்திப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.