இங்கிலாந்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - போரிஸ் ஜான்சன் திட்டம் என்ன?

இங்கிலாந்தில் வரும் டிசம்பர் 2 ஆம் தேதியோடு நாடு தழுவிய ஊரடங்கை முடித்துக்கொள்ள போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - போரிஸ் ஜான்சன் திட்டம் என்ன?
Published on

லண்டன்,

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் இருந்து வருகிறது. அங்கு மார்ச் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.

இதனை அடுத்து நாடு தழுவிய ஊரடங்குகளை அமல்படுத்திய பிரிட்டன் அரசு கொரோனா பரிசோதனைகளையும் துரிதப்படுத்தியது. இதனால் அங்குப் பாதிப்புகள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டன. மேலும் கடந்த ஜூன் மாதம் முதல் அங்கு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.

சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு பிரிட்டனில் கொரோனாவின் இரண்டாம் அலை வீச தொடங்கியதால், அங்கு வைரஸ் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து நவம்பர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் டிசம்பர் 2 ஆம் தேதிக்குப் பிறகு நாடு தழுவிய ஊரடங்கை முடித்துக்கொள்ள போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் பரவலில் நிலைத்தன்மை ஏற்பட்டதையடுத்து,

இந்த முடிவுக்குப் பிரிட்டன் அரசு வந்துள்ளது. பிராந்திய அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கவும் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொற்று பரவலின் தீவிரத்தன்மையை பொருத்து ஊரக அளவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தத் திட்டமிட்டு இருப்பதாக போரிஸ் ஜான்சன் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், அடுத்த மாதம் கோவிட் -19 தடுப்பூசியை நாடு தழுவிய அளவில் தொடங்குவதற்கான திட்டத்தையும் ஜான்சனின் அலுவலகம் உறுதிப்படுத்தியது. தடுப்பூசி செயல்பாட்டுக்கு வரும் வரையில், பெரிய அளவில் கொரோனா பரிசோதனைகளை நடத்தவும் பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, இங்கிலாந்தில் ஊரடங்குக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டதாக 12-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு போராட்டத்தில் பலர் ஈடுபட்டதை விமர்சித்துள்ள இங்கிலாந்து போலீஸ் அதிகாரிகள் மிகவும் சுயநலமிக்கது என்று விமர்சித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com