கனடா பிரதமரும் வாழ்த்தினார்: தமிழர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பொங்கல் வாழ்த்து

தைப்பொங்கல் பண்டிகையை உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதையொட்டி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டு பேசினார்.
கனடா பிரதமரும் வாழ்த்தினார்: தமிழர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பொங்கல் வாழ்த்து
Published on

லண்டன்,

தெரசா மே வணக்கம் என தமிழில் தனது வாழ்த்துச் செய்தியைத் தொடங்கினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, தைப்பொங்கல் கொண்டாடுவதற்காக இங்கு இங்கிலாந்திலும், உலகமெங்கும் உள்ள தமிழர்களும் ஒன்று சேர்கின்றனர். இந்த நாள் பழையவற்றை தூக்கி எறியவும், வரவுள்ள வாய்ப்புகளை தழுவிக்கொள்ளவும் வாய்ப்பு அளிக்கிறது. மேலும், அறுவடைக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதுடன் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் நன்றி தெரிவிக்கவும் வாய்ப்பாக அமைகிறது. இங்கிலாந்து தமிழர்கள் நமக்கு அளித்துள்ள மிகப்பெரிய பங்களிப்பை பிரதிபலிக்க நமக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது என கூறினார்.

இதேபோன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் தமிழ் மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தைப்பொங்கல் பண்டிகை மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்துக்கான தருணம் ஆகும். குடும்பங்கள், நண்பர்கள், அனைவரும் ஒன்று சேர்ந்து மகத்தான அறுவடைக்கு நன்றி தெரிவிக்கிறோம். இனிப்பு பொங்கலிடுகிறோம். அறுவடையின் நிறைவை இது குறிக்கிறது. இது தமிழ் பாரம்பரிய மாதமாகவும் அமைகிறது எனவும் கூறி உள்ளார்.

மர்காம் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடந்த பொங்கல் விழாவிலும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு தைப்பொங்கல் பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com