

கீவ்,
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரேனிய தலைநகர் கீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் உக்ரைனுக்கு கூடுதல் நிதி மற்றும் ராணுவ உதவிகளை அளிப்பதாக உறுதியளித்தார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகிய இருவரும் சேர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் தெருக்களில் நடந்து சென்று, ரஷிய படைகளின் குண்டுவீச்சால் ஏற்பட்ட இடிபாடுகளை இன்று பார்வையிட்டனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:-
உக்ரைனின் புச்சா, இர்பின் போன்ற இடங்களில் புதின் செய்தது போர்க்குற்றம் ஆகும்.
போர்க்குற்றங்கள் அவரது நற்பெயரையும் அவரது அரசாங்கத்தின் நற்பெயரையும் நிரந்தரமாக களங்கப்படுத்தியுள்ளன.
சில நாட்களில் உக்ரைன் மூழ்கடித்து விடலாம். கீவ் அவர்களின் படைகளின் தாக்குதலில் சில மணி நேரங்களிலேயே வீழ்ந்து விடும் என்று ரஷியர்கள் நம்பினர். அவர்கள் எவ்வளவு தவறாக எண்ணியிருக்கிறார்கள்!
உக்ரேனிய மக்கள் "சிங்கத்தின் துணிச்சலைக் காட்டியுள்ளனர்".உலகம் புதிய ஹீரோக்களை கண்டுபிடித்துள்ளது, அந்த ஹீரோக்கள் வேறு யாருமில்லை உக்ரைன் மக்கள் தான்.
அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உறுதியான தலைமை மற்றும் உக்ரேனிய மக்களின் வெல்ல முடியாத வீரம் மற்றும் தைரியம் ஆகியவற்றால் தான் விளாடிமிர் புதினின் கொடூரமான நோக்கங்கள் முறியடிக்கப்படுகின்றன.
21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆயுத சாதனையை எட்டிய உக்ரைன், கீவின் வாயில்களில் இருந்து ரஷியப் படைகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
தற்போதைய சண்டையில் பிரிட்டன், அவர்களுடன் அசையாமல் துணை நிற்கிறது. நீண்ட காலத்திற்கு நாங்கள் அதில் இருக்கிறோம்.
அதிபர் ஜெலென்ஸ்கியை இந்த திடீர் பயணத்தின்போது நேரில் சந்திப்பது ஒரு பாக்கியம்.
இவ்வாறு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று கீவ் பயணத்தின் போது கூறினார்.
உக்ரைனின் சில பகுதிகளில் இருந்து ரஷியப் படைகள் விலகிய பின்னர், அங்குள்ள பல நகரங்களில் இருந்து அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த புகைப்படங்கள் உலக அரங்கில் பெரும் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தின. அதன் பின்னர், இந்த வார இறுதியில் உக்ரைன் சென்ற சமீபத்திய ஐரோப்பிய தலைவராக ஜான்சன் மாறியுள்ளார்.
உலக வல்லரசுகள் உக்ரைனுக்காக நிதி திரட்டி வரும் சூழலில், உலக வங்கி மூலம் கூடுதலாக 50 கோடி டாலர் பெற்றுத் தருவதாக போரிஸ் ஜாண்சன் உக்ரைன் அதிபரிடம் உறுதியளித்தார்.
தொடந்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, "மற்ற மேற்கத்திய ஜனநாயக நாடுகளும் பிரிட்டனின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.