இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வீடு திரும்பினார் - டாக்டர்களுக்கு வாழ்வெல்லாம் கடன்பட்டிருப்பதாக நெகிழ்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கி, லண்டன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வீடு திரும்பினார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வீடு திரும்பினார் - டாக்டர்களுக்கு வாழ்வெல்லாம் கடன்பட்டிருப்பதாக நெகிழ்ச்சி
Published on

லண்டன்,

55 வயதான இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி, லண்டன் டவுனிங் வீதியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில், நோயின் தாக்கம் தீவிரமானது. இதையடுத்து கடந்த 5-ந் தேதி லண்டன் செயிண்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரது உடல்நிலை மோசமானதால், மறுநாள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் இரவு, பகலாக அளித்த சிகிச்சையின் மூலம் அவரது உடல்நிலை தேறியது. அதன் பின்னர் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் போரிஸ் ஜான்சன் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தார்.

இதையடுத்து நேற்று அவர் வீடு திரும்பினார். எனினும் மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் உடனடியாக பணிக்கு திரும்ப மாட்டார் என்று அவரது செய்தி தொடர்பாளர் கூறினார். தற்போது பிரதமர் பொறுப்பை அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி டொமினிக் ராப் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக போரிஸ் ஜான்சன் தனக்கு சிகிச்சை அளித்த தேசிய சுகாதார பணிகள் துறை டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள் என அனைவருக்கும், தன்னை கொரோனா வைரசின் தீவிர பிடியில் இருந்து மீட்டுக் கொண்டு வந்ததற்காக மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.

இதையொட்டி அவர் கூறுகையில், நான் அவர்களுக்கு வெறுமனே நன்றி கூறி விட முடியாது. என் வாழ்வெல்லாம் நான் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், தனது எண்ணங்கள் அனைத்தும், இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன்தான் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com