'உக்ரைனின் மறுசீரமைப்புக்காக 3 பில்லியன் டாலர்கள் வழங்கப்படும்' - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு

உக்ரைனுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உதவி செய்யப்படும் என ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
'உக்ரைனின் மறுசீரமைப்புக்காக 3 பில்லியன் டாலர்கள் வழங்கப்படும்' - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு
Published on

லண்டன்,

உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனின் உள்கட்டமைப்புகளை தகர்க்கும் விதமாக ரஷியா தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் எதிர்த்து போராடி வருகிறது.

இந்த போரால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாட்களில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனின் பல்வேறு நகரங்களில் மருத்துவம், கல்வி, மின்சாரம், குடிநீர் விநியோகம், போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் முற்றிலும் சீர்குலைந்துள்ளன.

இந்நிலையில் உக்ரைன் எதிர்பார்க்கும் உதவிகளை திட்டமிடுவதற்காக "சர்வதேச உக்ரைன் மீட்பு மாநாடு 2023" லண்டனில் நடைபெற்றது. பொருளாதார ரீதியாக உருக்குலைந்திருக்கும் உக்ரைனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடும் நோக்கில், 61 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களும், உலகளாவிய முதலீட்டாளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இதில் ரஷியப் படைகளுக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு அதன் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உதவி செய்யப்போவதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ரிஷி சுனக், "ஒரு துடிப்பான, ஆற்றல்மிக்க, ஆக்கப்பூர்வமான மற்றும் அடங்கிப்போக மறுக்கும் நாடு உக்ரைன். எனவே, எங்கள் நட்பு நாடுகளுடன் சேர்ந்து உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் எதிர்தாக்குதலுக்கான எங்கள் ஆதரவை அளித்து இந்த போரில் அவர்கள் வெற்றிபெறும் வரை உக்ரைனுடன் நாங்கள் நிற்போம்" என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com