

கீவ்,
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் 6 வாரங்களை கடந்து நீண்டு கொண்டிருக்கிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டு வரும் நிலையில், 45 லட்சத்துக்கும் அதிகமான உக்ரைன் மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த போர் காரணமாக ரஷியா அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டபோதிலும் போரை நிறுத்த அந்த நாடு மறுத்து வருகிறது. தலைநகர் கீவ் உள்பட உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றும் ரஷிய படைகளின் முயற்சி உக்ரைன் வீரர்களால் முறியடிக்கப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் வசம் இருக்கும் டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக தன்வசமாக்கும் முயற்சியில் ரஷிய படைகள் ஈடுபட்டுள்ளன. அதே வேளையில் கீவ், கார்கிவ், மரியுபோல் போன்ற முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்களையும் ரஷிய படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் கார்கிவ் நகரில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ரஷிய படைகளின் தாக்குதல்களில் 7 வயது சிறுவன் உள்பட அப்பாவி மக்கள் 11 பேர் கொல்லப்பட்டதாக அந்த நகரின் மேயர் தெரிவித்தார்.
அப்பாவி மக்களை குறிவைத்து ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்துவதன் மூலம் ரஷிய படைகள் போர் குற்றங்களில் ஈடுபடுவதாக உக்ரைன் தரப்பு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
கடந்த வாரம் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் 400-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் ரஷிய வீரர்களால் துன்புறுத்தி கொல்லப்பட்டது தெரியவந்தது. புச்சா நகரின் வீதிகளில் மனித உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் கிடப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்த நிலையில் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 1,200-க்கும் அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ரஷிய படைகள் வீசும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகளை வெற்றிகரமாக அழித்துவிட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் மத்திய நகரமான டினிப்ரோ நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 எஸ்300 வான்பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷிய படைகள் இன்னும் அதிகமான ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்கலாம் என்பதால், அடுத்த சில நாட்கள் முக்கியமானவை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அங்கு சண்டை தீவிரமடையும் என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, ரஷிய ராணுவத்தின் தாக்குதல்கள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் அருகே கெர்சன் மற்றும் மைகோலைவ்வைச் சுற்றி கடுமையாக போர் புரிவதற்காகவும், கிராமடோர்ஸ்க்கை நோக்கி ஒரு புதுப்பிக்கப்பட்ட உந்துதலுடன் கவனம் செலுத்துவதாகவும் இங்கிலாந்து இராணுவ உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.