ரஷிய படைகளை குழப்ப சாலை வழிகாட்டி பலகைகளை அகற்றும் உக்ரைன்

டயர்கள் மற்றும் மரங்களை எரித்தும், தடுப்புகளை அமைத்து அனைத்து வழிகளிலும் எதிரிகளைத் தடுக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது.
ரஷிய படைகளை குழப்ப சாலை வழிகாட்டி பலகைகளை அகற்றும் உக்ரைன்
Published on

கிவ்,

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 4-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

இதற்கிடையில், போரை முடிவுக்கு கொண்டுவர பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு உக்ரைனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ரஷியா தெரிவித்திருந்தது. பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக ரஷியா இன்று தெரிவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரேனிய சாலை பராமரிப்பு நிறுவனம் ரஷ்ய தாக்குதலைத் தாமதப்படுத்தும் முயற்சியில், ரஷிய படைகளை குழப்புவதற்காக அனைத்து சாலைகளில் உள்ள வழிகாட்டி பலகைகளில் திருத்தங்களை செய்துவருகிறது. சாலையில் உள்ள வழிகாட்டி பலகைகளை பயன்படுத்தி எளிதில் செல்ல வேண்டிய இடத்தின் வழியை அறிந்து கொள்ளமுடியும் என்பதால் அதில் உள்ள திசைகளை மாற்றியும், இடங்களின் பெயருக்கு பதிலாக ரஷ்யாவிற்கு திரும்பி செல் என்பன போன்ற வாசகங்களை எழுதி வருகின்றனர்.

அரசாங்க நிறுவனமான உக்ரவ்டோடர் பேஸ்புக்கில், எதிரிக்கு மோசமான தகவல் தொடர்பு இருப்பதாகவும், இதனால் நிலப்பரப்பில் சரியான இடத்திற்கு செல்ல முடியாது அவர்கள் நேராக நரகத்திற்குச் செல்ல வேண்டும் ,என்றும் கூறியது.

அருகிலுள்ள சாலை அடையாளங்களை உடனடியாக திருத்தங்களை மேற்கொள்ள அனைத்து சாலை அமைப்புகளையும் உள்ளூர் அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் டயர்கள் மற்றும் மரங்களை எரித்தும், தடுப்புகளை அமைத்து அனைத்து வழிகளிலும் எதிரிகளைத் தடுக்குமாறு நிறுவனம் மக்களை வலியுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com