

கீவ்,
தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் நேற்று 12-வது நாளை எட்டியது.
மனிதாபிமான அடிப்படையில் குறிப்பிட்ட சில நகரங்களில் போரை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக ரஷிய படைகள் கூறினாலும் கூட அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றுதான் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் போர் நிறுத்தம் அறிவித்த நகரங்களிலும் பீரங்கி குண்டு வீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்கின்றன. இதுதவிர உக்ரைனின் மற்ற நகரங்களையும் ரஷிய படைகள் சுற்றிவளைத்து உக்கிரமாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
ராணுவ கட்டமைப்புகளை மட்டுமே குறிவைக்கிறோம் என கூறி ரஷியா போரை தொடங்கினாலும் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் என ரஷிய படைகளின் தாக்குதல்கள் விரிவடைந்து வருகின்றன. இதற்கிடையில் கீவின் மற்றொரு அண்டை நகரமான ஹாஸ்டோமலில் ரஷிய வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்த நகரின் மேயர் கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹாஸ்டோமல் நகரின் மேயரான யூரி புரைலிப்கோ, போரால் பாதிக்கப்பட்டுள்ள தனது நகர மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை கொடுத்து உதவுவதற்காக வெளியே வந்தபோது துப்பாக்கிச்சூட்டில் பலியானார் என்பது கூடுதல் சோகம் ஆகும்.
இந்நிலையில் கார்கிவ் அருகே ரஷிய மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோவை உக்ரைன் கொன்றதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ரஷிய மேஜர் ஜெனரல் ஜெராசிமோவ் ஒரு மூத்த இராணுவ அதிகாரி ஆவார். அவர் இரண்டாவது செச்சென் போரில் பங்கேற்றார் மற்றும் கிரிமியாவைக் கைப்பற்றியதற்காக பதக்கம் பெற்றவர் ஆவார்.