

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தி வந்த தாக்குதல்களை உக்ரைன் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனினும், தற்போது வரை அதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சமீபகாலமாக உக்ரைனின் எண்ணெய் கட்டமைப்புகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்படுவதால், எண்ணய் கட்டமைப்புகளை தாக்குவதை தவிர்க்குமாறு டிரம்ப், வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: அக்டோபர் மாதத்தின் மத்தியில் உக்ரைனின் நீண்டதூர தாக்குதல் படைகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில்,ஏற்கனவே தொடங்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளை முடித்த பிறகு, ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இடைக்காலத் தேர்தல் முடியும் வரை இந்தத் தற்காலிகத் தடை நீடிக்கலாம் என்றும், நவம்பர் மாதம் வரை தொடர வாய்ப்புள்ளது’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உக்ரைன் தாக்குதல்களை நிறுத்தியதாக கூறப்படும் நிலையில், ரஷ்யா தொடர்ந்து உக்ரைனின் மின்சாரம் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.