மரியுபோலில் இருந்து பொதுமக்கள் வெளியேற பாதுகாப்பான வழித்தடம் அமைக்க ரஷியா ஒப்புதல்

பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு மனிதாபிமான வழித்தடம் அமைக்கப்படும், பொதுமக்கள் ஜாபோரிஜியா நகரத்துக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
Image Credit: Twitter @lapatina_
Image Credit: Twitter @lapatina_
Published on

கீவ்,

உக்ரைன் போர் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனின் மரியுபோல் நகரம் ரஷியாவின் கடும் தாக்குதலால் உருக்குலைந்து போனது. தற்போது மரியுபோலில் எஞ்சியுள்ள உக்ரைன் துருப்புக்களை வெளியேற்ற ரஷியப் படைகள் கடுமையாகப் போரிட்டு வருகின்றன.

முன்னதாக, மரியுபோலில் உள்ள உக்ரைன் வீரர்கள் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுமாறு ரஷியா ஒரு இறுதி எச்சரிக்கையை வெளியிட்டது. இந்த நிலையில், உக்ரைன் வீரர்களுக்கு விடுத்த அந்த காலக்கெடு முடிந்தது என ரஷியா தெரிவித்துள்ளது. இதனால் சண்டை மேலும் தீவிரமாகும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து பொதுமக்கள் தப்பிச் செல்வதற்கு பாதுகாப்பான பாதையை திறக்க ரஷிய படைகளுடன் உக்ரைன் ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

கடந்த 3 நாட்களாக ரஷிய படைகளின் கடும் தாக்குதல் காரணமாக பொதுமக்களை வெளியேற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மரியுபோலில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு பாதுகாப்பான வழித்தடம் அமைக்க இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் இன்று ஒரு டெலிகிராமில் இதனைத் தெரிவித்துள்ளார். பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு மனிதாபிமான வழித்தடம் அமைக்கப்படும், பொதுமக்கள் ஜாபோரிஜியா நகரத்துக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

ரஷிய போர் தொடங்கியதிலிருந்து இதுவரை மனிதாபிமான வழித்தடங்கள் வழியாக சுமார் 3 லட்சம் பேர் தப்பித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com