உக்ரைன் போர்: ரூ.80 லட்சம் செலவில் செல்ல பிராணிகள் காப்பகம் அமைத்த இந்தியர்

உக்ரைனில் சிக்கிய இந்திய டாக்டர் கருஞ்சிறுத்தை உள்ளிட்ட தனது செல்ல பிராணிகளுக்கு ரூ.80 லட்சம் செலவில் காப்பகம் அமைத்து உள்ளார்.
உக்ரைன் போர்: ரூ.80 லட்சம் செலவில் செல்ல பிராணிகள் காப்பகம் அமைத்த இந்தியர்
Published on

கீவ்,

இந்தியாவில் ஆந்திர பிரதேசத்தில் பிறந்தவர் கிரிகுமார் பாட்டீல். 2007ம் ஆண்டு மருத்துவம் படிக்க உக்ரைன் நாட்டுக்கு சென்றுள்ளார். பின்பு 2014ம் ஆண்டு வரை, சிவிரோடோனெட்ஸ்க் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் எலும்புமூட்டு சிகிச்சைக்கான பயிற்சி டாக்டராக பணியில் இருந்துள்ளார்.

கீவ் உயிரியல் பூங்காவில் உள்ள கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தைபுலி ஆகியவற்றை தத்தெடுத்து கடந்த 20 மாதங்களாக செல்ல பிராணிகளாக வளர்த்து வருகிறார். உக்ரைனில் போர் நடந்து வரும் சூழலில், இந்தியர்கள் பலர் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாடு திரும்பினர்.

ஆனால், செல்ல பிராணிகளான இவற்றை கொண்டு செல்ல பாட்டீலுக்கு விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அவர் உக்ரைனிலேயே தங்க முடிவு செய்துள்ளார்.

குண்டுவீச்சில் இருந்து இந்த 2 செல்ல பிராணிகளையும் பாதுகாக்க முடிவு செய்த அவர் அதற்காக ரூ.80 லட்சம் செலவில் வெடிகுண்டு காப்பகம் அமைத்து உள்ளார். ஊரடங்கு தளர்வு நேரத்தில் சந்தைக்கு சென்று தனது செல்ல பிராணிகளுக்கு தேவையான உணவை கொண்டு வருகிறார்.

செல்ல பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவரான பாட்டீல், இவை தவிர இத்தாலிய நாட்டை சேர்ந்த 3 நாய்களையும் வளர்த்து வருகிறார்.

போர் இவருக்கு புதிதல்ல. லுகான்ஸ்க் பகுதியில் வசித்தபோது, 2014ம் ஆண்டில் ரஷிய ஆதரவு படைகள் உக்ரைன் படைகளுக்கு எதிராக போரிட்டன. இதனால், அந்த பகுதியில் அமைந்திருந்த தனது உணவு விடுதி மற்றும் வீடு ஆகியவற்றை அவர் இழந்துள்ளார்.

எனினும், இந்த முறை நிலைமை மிக மோசம் என பாட்டீல் கூறுகிறார். இவற்றை வளர்க்க ஆகும் செலவுக்கு, யூ-டியூப் சேனல் வழியேயும் நிதி திரட்டி வருகிறார். அதில், 85 ஆயிரம் பேர் இவரை பின்தொடர்கின்றனர்.

இந்த சூழலில், 2 மாதங்களுக்கு பின் இந்தியா திரும்ப முடிவு செய்துள்ள அவர், இந்திய அரசிடம் பேசி செல்ல பிராணிகளை சொந்த நாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுவேன் என கூறுகிறார்.

இவர் தெலுங்கு தொடரிலும் மற்றும் உக்ரைனிய திரைப்படங்களிலும், தொடர்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com