ரஷிய கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை வெளியேற்றி வரும் தன்னார்வல ஓட்டுநர்கள்!

இது ஆபத்தான பயணம் என்றாலும் மக்கள் அதையே தேர்ந்தெடுத்துள்ளனர்.நகரிலிருந்து மக்களை வெளியேற்றுவது கடினமாக உள்ளது.
Image Credit : Reuters
Image Credit : Reuters
Published on

ஒடேசா, உக்ரைன்:

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போரைத் தொடங்கியது. 3 மாதமாக இந்தப் போர் நீடித்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றும் ரஷியாவின் கனவு பலிக்கவில்லை. ஆனால் அதன் மற்றொரு முக்கிய நகரமான மரியுபோல் நகரை கைப்பற்றும் கனவு நிறைவேறி உள்ளது. அந்த நகரை ஏற்கனவே கைப்பற்றியதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். அங்கு போர் தொடங்கிய நாள் முதல் முற்றுகையிட்டு, ரஷிய படைகள் நடத்திய தாக்குதல் அந்த நகரை உருக்குலைந்து போகச்செய்தது.

இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள கெர்சன் மற்றும் பிற ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற தொடங்கியிருக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக, ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சன் பிரதேசத்தில் ரஷ்யா தனது பிடியை இறுக்கிக் கொண்டிருப்பதால், கெர்சனை விட்டு வெளியேற அதிக மக்கள் விரும்புகின்றனர். அப்பகுதிகளில் ரஷ்ய காவல்துறையின் மிரட்டல், உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அதிகாரிகளால் கடத்தப்படுமோ என்ற அச்சம் போன்றவற்றின் காரணமாக பெரும்பாலானோர் அங்கிருந்து மேற்கு உக்ரைன் நோக்கி நகர தொடங்கியுள்ளனர்.

ஒடெசா என்ற டெலிகிராம் சேனலில் இருந்து உருவான தன்னார்வ அமைப்பின் ஒரு பகுதியாக உள்ள தன்னார்வல ஓட்டுனர்கள் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற உதவி செய்து வருகின்றனர் என்று பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள கெர்சன் மற்றும் பிற ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கு முன்களப் பணியாளராக இருக்கும் தன்னார்வ ஓட்டுநர்களில் அலெக்சாண்டர் ஒருவர். அவருக்கு 20 வயது தான் இருக்கும்.

இது ஆபத்தான பயணம் என்றாலும் மக்கள் அதையே தேர்ந்தெடுத்துள்ளனர். நகரிலிருந்து மக்களை வெளியேற்றுவது கடினமாக உள்ளது. ரஷியா-உக்ரைன் இரு தரப்பிலிருந்தும் பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெற முடியாததால், எந்தவொரு வெளியேற்ற வழித்தடங்களையும் எங்களால் ஏற்படுத்தி கொடுக்க இயலவில்லை என்று ஐநா மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது என்று தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

மாறாக, அலெக்சாண்டர் போன்ற தன்னார்வல ஓட்டுநர்கள், எந்தவொரு முறையான ஒப்பந்தங்களும் இல்லாமல் சோதனைச் சாவடிகள் மற்றும் வழித்தடங்களை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இன்னொரு தன்னார்வல ஓட்டுனரான ஓலெக் கூறியதாவது;-

இத்தகைய ஆபத்தான காரியங்களில் ஈடுபட, நீங்கள் குளிர்ந்த மனதையும் உறுதியான இதயத்தையும் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் இறுதி இலக்கை அடைய முடியாது. ஒவ்வொரு புதிய சவாரியும் கடினமாக இருக்கும். பழைய வழிகள் மூடப்பட்டுள்ளன, புதிய வழிகளைத் தேட வேண்டும்.

கடந்த இரண்டு நாட்களாக நாங்கள்(பயணிகள்) சோதனைச் சாவடிக்கு அதிகாலை 5:00 மணிக்கு வந்தோம். ஆனால், மாலை வரை காத்திருக்க வேண்டும். அங்கு சுமார் 2,000 வாகனங்கள் வரிசையில் இருக்கும். யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

நாங்கள் இன்னும் திறக்கப்படாத ஒரு வழியில் செல்ல முடிவு செய்தோம், ஏனென்றால் அங்கு தீவிரமான போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது மிக விரைவான பாதை என்பதால் அந்த முடிவை எடுத்தோம். வண்டியில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருந்ததால், நாங்கள் இந்த ஆபத்தான முடிவை எடுக்க வேண்டியிருந்தது. அதை அனைத்து பயணிகளும் ஒப்புக்கொண்டனர். அதிர்ஷ்டவசடமாக தப்பித்து வந்துவிட்டோம்.

இன்னும் இரண்டு வேன்கள் கெர்சனில் உள்ளன. அவர்கள் பயணத்தை மேற்கொள்ள தயாரக உள்ளனர்.அதில் ஒன்று அலெக்சாண்டரால் இயக்கப்படுகிறது. ஆனால், நேற்றிரவு முதல் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்றார். 

தன்னார்வலர்கள் காய்கறிகள், பழங்கள், ரொட்டி, தானியங்கள் மற்றும் நாப்கின்களை புதிதாக வருபவர்களுக்காக மீட்புப் பொதிகளில் குவித்து வைக்கின்றனர். ஓட்டுனர்கள் திரும்பி வரும் வரை என்னால் மூச்சு விட முடியாது. நான் தூங்கவில்லை.நான் எல்லாவற்றையும் பற்றி கவலைப்படுகிறேன். எங்களுக்கு பொறுப்பு அதிகம் என்கிறார் தன்னார்வல குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஜூலியா.

இத்தகைய பெரிய ஆபத்துக்களை எடுக்க ஏன் மக்களை ஊக்குவிக்கிறார்கள்? என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

நாம் அதை செய்ய வேண்டும். கெர்சனில் இருந்து வெளியேற்றப்பட விரும்பும் பட்டியலில் சுமார் 5,500 பேர் உள்ளனர். சுற்றியுள்ள கிராமங்களில் இருப்பவர்கள் இந்த கணக்கில் வரவில்லை.எங்களை வரச் சொல்லி அழுதுகொண்டே மக்களிடமிருந்து அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு உதவுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றார் அவர்.

அவர் மேசையில் அமர்ந்திருக்கிறார், ஒரு கையை தொலைபேசியில் வைத்திருக்கிறார், மற்றொன்று கண்களில் வழிந்தோடு கண்ணீரைத் துடைத்துக்கொண்டும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com